CNG Vehicles Refill Stations: சிஎன்ஜி எரிபொருள் விநியோகத்தில் நிலையற்ற தன்மை இருப்பது, கவலை அளிப்பதாக எரிபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் சிஎன்ஜி வாகன பயன்பாடு:

குறைந்த இயக்கச் செலவு மற்றும் சிறந்த மைலேஜ் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் சிஎன்ஜி பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனாலும், சென்னை பகுதி போதுமான உள்கட்டமைப்பு இன்றி பின்தங்கியுள்ளது. இது எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கும், நிச்சயமற்ற விநியோகத்திற்கும் வழிவகுக்கிறது. மத்திய அரசு தரவுகளின்படி, 2020-ஆம் ஆண்டு முதல் சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) சுமார் 1.25 லட்சம் சிஎன்ஜி, பெட்ரோல்-சிஎன்ஜி மற்றும் டீசல்-சிஎன்ஜி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், ஏறத்தாழ 85,000 வாகனங்கள் சிஎன்ஜி-மட்டுமே இயங்கும் வாகனங்களாகும்.

சென்னையில் சிஎன்ஜி நிலையங்கள்:

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் தகவல்படி, ஏப்ரல் 2026 நிலவரப்படி, சென்னை மற்றும் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் 87 சிஎன்ஜி நிலையங்களும், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் 52 சிஎன்ஜி நிலையங்களும் செயல்பாட்டில் இருந்தன. ஆனால் இது பயன்பாட்டில் உள்ள் சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை என்பதே, வாகன ஓட்டிகளின் கவலையாக உள்ளது.

விற்பனையாளர்கள் கவலை:

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு பெட்ரோல் டீலர்கள் சங்கத் தலைவர் கே.பி. முரளி, ”சீரற்ற விநியோகம் டீலர்களுக்குக் கவலையளிக்கிறது. எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் சிஎன்ஜியின் கணிசமான பகுதி தனியார் நிறுவனங்களிடமிருந்து வருவதால், அதன் கிடைக்கும் தன்மை அவர்களின் விநியோக அட்டவணையைச் சார்ந்துள்ளது” என்று விளக்கமளித்துள்ளார். சிஎன்ஜி கிடைப்பதில் உள்ள பற்றாக்குறை, வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக, சென்னை சுற்றுலா கார் நடத்துநர்கள் சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர். இதுதொடர்பாக பேசும் வாடகை கார் ஓட்டுனர்கள் சிஎன்ஜி நிரப்ப 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது என கவலை தெரிவிக்கின்றனர். சிஎன்ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்கு நிலம் கிடைப்பது மற்றொரு தடையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் CNG கார் விற்பனை:

2026 நிதியாண்டின் முடிவில் தொழிற்சாலையிலேயே சிஎன்ஜி பொருத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை 10.14 லட்சம் யூனிட்டுகளைத் தாண்டியது. இது இந்தியா முழுவதும் நடந்த மொத்த பயணிகள் வாகன விற்பனையில் ஏறத்தாழ 22 சதவிகிதம் ஆகும் . மாதாந்திர விற்பனை அளவு ஒரு லட்சம் என்ற இலக்கைத் தாண்டி, ஆகஸ்ட் 2026-ல் 1,05,249 யூனிட்களை எட்டியது. இது ஆகஸ்ட் 2025-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ஆண்டு 46.1% என்ற மிகப்பெரிய வளர்ச்சி பதிவாகியுள்ளது. மாற்று எரிபொருள் பிரிவுகள் விரிவடைந்ததால், 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெட்ரோல் சில்லறை விற்பனைப் பதிவுகள் வரலாறு காணாத வகையில் சுமார் 41 ஆகக் குறைந்தன. எரிபொருள் விலையில் நிச்சயமற்ற தன்மை, மைலேஜ் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் சிஎன்ஜி பவர்ட்ரெயின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

Source: Read Full Article