CM Vijay By election Plan: இடைத்தேர்தலுக்கு தயாராகும் விதமாகவே நவம்பர் 2ம் தேதி புதுக்கோட்டையிலும், 3ம் தேதி ஈரோட்டிலும் முதலமைச்சர் விஜய் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளாராம்.

சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் பணிகள்:

தமிழ்நாட்டில் காலியாக உள்ள பெருந்துறை, விராலிமலை, திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியான திமுக இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பொறுப்பாளர்களை நியமித்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மறுமுனையில் பெரிய அளவில் கூட்டணி கட்சிகளை சார்ந்து இருக்காமல், சொந்த பலத்தினை அதிகப்படுத்த 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் முழுமையாக வெற்றி பெற முதலமைச்சர் விஜய் திட்டமிடுகிறார். அதற்காகவே காலியாக உள்ள 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ள 5 மாவட்டங்களுக்கும் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதலமைச்சர் முடிவு செய்துள்ளாராம்.

பல்ஸ் பார்க்கும் முதலமைச்சர் விஜய்:

தேர்தல் அரசியலுக்கு புதியது என்பதால் பொதுத்தேர்தலின் போது, திமுக மற்றும் அதிமுகவினரால் தவெகவை கடுமையாக விமர்சிக்க முடியவில்லை. அதேநேரம் ஆட்சிக்கு வந்து சுமார் 5 மாதங்கள் ஆன நிலையில், சட்ட-ஒழுங்கு, மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் அரசுக்கான சவாலாக உருவெடுத்துள்ளன. அவற்றை கொண்டு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு தவெகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனால் முதலமைச்சர் விஜயின் மாஸ் மற்றும் தவெகவிற்கான ஆதரவு குறைந்து வருவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அரசுக்கான ஆதரவு களத்தில் எப்படி உள்ளது என்பதை அறிவதோடு, இடைத்தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் முதலமைச்சர் விஜய், தாமாகவே களத்தில் இறங்க உள்ளாராம். அதன்படியே, நவம்பர் 2ம் தேதி புதுக்கோட்டையிலும், 3ம் தேதி ஈரோட்டிலும் முதலமைச்சர் விஜய் அடுத்தடுத்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளாராம்.

இதையும் படியுங்கள்: Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?

புதுக்கோட்டையில் முதலமைச்சர் விஜய்:

அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று தனது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கரால் காலியான விராலிமலை தொகுதி புதுக்கோட்டையில் தான் உள்ளது. வரும் 2ம் தேதி அங்கு நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேகும் முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் திறந்து வைப்பதோடு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். அதோடு ரோட் ஷோ மூலம் பொதுமக்களையும் சந்திக்க உள்ளார்.

ஈரோட்டில் முதலமைச்சர் விஜய்:

தொடர்ந்து, அதிமுக சார்பில் வென்று தனது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த ஜெயக்குமாரால் காலியான பெருந்துறை தொகுதி ஈரோட்டில் தான் உள்ளது. வரும் நவம்பர் 3ம் தேதி அங்கு அரசு சார்பில் தனியார் கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார். சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வரை தனி விமானத்தில் சென்று, அங்கிருந்து ஈரோடு வரை பிரமாண்ட ரோட் ஷோ நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து பயணம்:

இதேபோன்று கரூர், திருச்சி கிழக்கு மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி அமைந்துள்ள நெல்லைக்கும் அடுத்தடுத்து சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதன் மூலம் இடைத்தேர்தலுக்கு தவெகவிற்கான களத்தை வலுப்படுத்துவதோடு, தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு திட்டமும் வகிக்க முடியும் என தவெக தரப்பு நம்புகிறதாம்.

Source: Read Full Article