Chennai Airport Private Partnership: சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம், பயணிகளின் சேவைக்கான தரத்தை மேம்படுத்த முடியும் என அரசு நம்புகிறதாம்.

குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்?

அரசு மற்றும் தனியார் கூட்டாண்மையின் கீழ், சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களை, தனியார் நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறதாம். இதன் மூலம் விமான நிலையங்களில் பயணிகளுக்கான சேவை மற்றும் உட்கட்டமைப்பை சர்வதேச தரத்தில் உயர்த்த அரசு விரும்புகிறதாம். இந்த விவகாரத்தை விமானப்போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறதாம். ஒருவேளை இதற்கு ஒப்புதல் கிடைத்தால் ஏற்கனவே தனியாரால் வழிநடத்தப்படும் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற முக்கிய விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை மற்றும் கொல்கத்தாவும் இணையும்.

தனியார் வசம் செல்வது என்ன?

தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு விடுவதன் மூலம், விமான நிலைய பொறுப்புகள் அரசு தரப்பில் இருந்து பிரித்துக்கொள்ளப்படுகின்றன. அதன்படி, விமான நிலையத்தின் தினசரி செயல்பாடுகள், கடைகள், உணவகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகியவை தனியாரால் கையாளப்படும். அதேநேரம், வான் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவை தொடர்ந்து மத்திய அரசு தரப்பிலேயே நிர்வகிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார்மயமாக்க அரசு கோரிக்கை:

பயணிகளுக்கான வசதிகள், தரமான சேவைகள், அதிகப்படியான விமான இயக்கம், சரக்கு ஏற்றுமதி திறனை மேம்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகிறது. இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். அதில், தொழில் முதலீடுகளை ஈர்க்க விமான நிலைய நிர்வாகத்தை தனியார்மயமாக்குவதோடு, சேவைகளையும் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். சென்னைக்கான இரண்டாவது விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட பரந்தூர் திட்டத்தை விஜய் தலைமையிலான அரசு ரத்து செய்ததை தொடர்ந்து, மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள மத்திய அரசின் பரிசீலனையால் இந்த விமான நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: TN Govt: அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!

பின்னடைவை சந்திக்கும் சென்னை விமான நிலையம்..!

சென்னை விமான நிலையத்தை T5 எனப்படும் புதிய முனையத்தை அமைத்து விரிவுபடுத்த, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், இரண்டாவது விமான நிலையத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டதால், மீனம்பாக்க விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. இதனிடையே, மோசமான பராமரிப்பு, தரமற்ற சேவைகள் காரணமாக சர்வதேச அளவில் கையாளும் பயணிகளின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது. விமானங்களுக்கான டர்பைன் எரிபொருள் மீது ஆந்திரா (1%) மற்றும் கர்நாடகா (18%) போன்ற அண்டை மாநிலங்கள் வசூலிக்கும், மதிப்பு கூட்டப்பட்ட வரியை காட்டிலும் தமிழக அரசு (29%) அதிகமாக வசூலிக்கிறது. இதனால் ஏர் இந்தியா போன்ற பல முன்னணி நிறுவனங்கள் சென்னையில் இருந்து இயக்கும் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. இதனிடையே, T3 முனைய மேம்பாட்டிற்கான பணிகளும் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

இத்தகைய காரணங்களால் தான் ஒட்டுமொத்தமாக தற்போதைக்கு ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகளை கையாளும் திறனை கொண்டிருந்தாலும், கடந்த 2025-26 நிதியாண்டின் சென்னை விமான நிலையம் வெறும் 2 கோடியே 20 லட்சம் பேர் மட்டுமே அங்கிருந்து பயணித்துள்ளனர். இந்த நிலையை மாற்றும் நோக்கிலேயே தனியார்மயமாக்கல் கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

Source: Read Full Article