TN Govt Cauvery Issue: காவிரி தொழில்நுட்பக் குழுவிற்குத் தகுதியும் போதிய அனுபவமும் கொண்ட துணைத் தலைவரைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என, செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

செல்வப்பெருந்தை கோரிக்கை:

காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணை தலைவர் பதவி கடந்த 3 மாதங்களாகவே காலியாக உள்ளது. காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவதில் இந்த குழு மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறது. எனவே காலியாக உள்ள துணை தலைவர் பதவியை உடனே நிரப்ப வேண்டும் என பல்வேறு விவசாய சங்கங்களும் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், பதவியை நிரப்புவதற்கான அரசாணை கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், அதன் பிறகு அது தொடர்பான எந்தவித ஆலோசனையும் நீர்வளத்துறையில் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தான், காவிரி தொழில்நுட்பக் குழுவிற்குத் தகுதியும் போதிய அனுபவமும் கொண்ட துணைத் தலைவரைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என, செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் உயிர்நாடி..!

இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் காவிரி நதிநீர்ப் பிரச்சினை, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது. காவிரி நதிநீர்ப் பகிர்வில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குச் சட்ட ரீதியான நடவடிக்கைகளுடன், வலுவான தொழில்நுட்ப அணுகுமுறையும் அவசியமாகும். காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவராகப் பணியாற்றும் த சுப்பிரமணியன் அவர்களின் நீண்டகால அனுபவமும் நீர்வள மேலாண்மையில் அவர் ஆற்றிவரும் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதேவேளையில், குழுவின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும், பணிகளில் தொடர்ச்சியையும் ஒருங்கிணைப்பையும் உறுதிப்படுத்தவும் தகுதியும் அனுபவமும் வாய்ந்த துணைத் தலைவரை நியமிக்க வேண்டியது அவசியமாகிறது.

”தகுதியான நபரை நியமிக்க வேண்டும்”

காவிரி நீர்வரத்தைக் கண்காணித்தல், நீர்ப் பகிர்வு தொடர்பான தொழில்நுட்பத் தரவுகளை ஆய்வு செய்தல், நீர்த்தேக்கங்களின் நிலவரங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நீர்வளப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுதல் உள்ளிட்ட பணிகளில் நிபுணர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு இன்றியமையாதது. எனவே, காவிரி தொழில்நுட்பக் குழுவிற்குத் தகுதியும் போதிய அனுபவமும் கொண்ட துணைத் தலைவரைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரம்..!

இதன் மூலம் குழுவின் செயல்திறனை மேம்படுத்தி, காவிரி நீர்ப் பகிர்வில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்ட மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். காவிரி என்பது வெறும் நதி மட்டுமல்ல் அது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் உரிமை. எனவே, இவ்விவகாரத்தில் காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டின காவிரி நதிநீர் உரிமைகளைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்” என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்,

Source: Read Full Article