"கல்லாவில் எவ்வளவு பணம் உள்ளது ? "

சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர் முதல் பிரதான சாலையில் உள்ள கே.எம்.டி. தேநீர் கடையை பஷீர் ( வயது 47 ) என்பவர் நடத்தி வருகிறார். இரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் , தேநீர் கடைக்குள் நுழைந்துள்ளனர். அப்போது கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்களை வெளியே செல்லுமாறு கூறிய அவர்கள் , கடை உரிமையாளர் பஷீரிடம் கல்லாவில் எவ்வளவு பணம் உள்ளது என கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த பஷீர், கல்லாவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்கள், இந்த சம்பவத்தை வெளியே கூறினால் வெட்டி விடுவோம் எனவும் பஷீருக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

வியாபாரிகள் சங்கம் சார்பில் புகார்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பஷீர் , மாத்தூர் வியாபாரிகள் சங்கத்தினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மாத்தூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சி.சி.டி.வி காட்சிகளில் பதிவான மர்ம நபர்களின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்போன் கடைக் காரருக்கு அரிவாள் வெட்டு - த.வெ.க வட்டச் செயலாளருக்கு வலை வீச்சு

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 17-வது தெரு வைச் சேர்ந்த 26 வயதான பிரகாஷ்ராஜ் , பர்மா பஜாரில் உள்ள செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார். இரவு சுமார் 10.30 மணியளவில், எருக்கஞ்சேரி மெயின் ரோடு மணல் குடோன் அருகே தனது நண்பர்களை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு 5-க்கும் மேற்பட்டோர் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது..பிரகாஷ்ராஜை அழைத்த அவர்கள், எதற்காக இங்கு வந்தாய் ? என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். தான் நண்பர்களை பார்க்க வந்ததாக பிரகாஷ்ராஜ் தெரிவித்த நிலையில் , வினீத் உள்ளிட்ட சிலர் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியதுடன் , கத்தியாலும் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ்ராஜ், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலி, 3 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிரகாஷ்ராஜின் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பிரகாஷ்ராஜ் அளித்த புகாரின் பேரில், எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் , இந்த தாக்குதல் சம்பவத்தில் தவெக பெரம்பூர் தொகுதி 45-வது வார்டு வட்ட செயலாளர் வினீத் மற்றும் அவரது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வினீத் உள்ளிட்டவர்களை எம்.கே.பி நகர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Source: Read Full Article