திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் பெண் ஒருவர் வீடு கட்டியதாக கூறி தாசில்தார் வீட்டை தரை மட்டமாக இடித்து தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவரை இழந்த பெண், தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் செய்வதறியாது தவித்து வருகிறார்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சொரக்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கிணற்றுக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சம்பூர்ணம். இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அவரது இரண்டு பெண் குழந்தைகளுடன் அரசுக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், குடிசை வீடு சேதமடைந்ததுடன் அடிக்கடி விஷப்பூச்சிகளின் பாதிப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தனது குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தகரச் சீட்டுகளால் மேற்கூரை அமைத்து செங்கற்களை கொண்டு சிறிய வீடு கட்டும் பணியில் சம்பூர்ணம் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவது தொடர்பாக சம்பூர்ணத்திடம் கேள்வி எழுப்பி, அவரது குடும்பத்தினரை எச்சரித்ததாக சொல்லப்படுகிறது‌.

இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டுமானப் பகுதி அகற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் கணவரை இழந்த சம்பூர்ணம் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் செய்வதறியாது தவித்து வருகிறார்.

எனவே, சம்பூர்ணத்தின் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி அவருக்கு அரசு சார்பில் இலவச வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article