இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ளது. குறிப்பாக பயணிகளின் பாதுகாப்பிற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளது.

இந்த நிலையில், ரயில் பயணத்தின்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கான சட்ட விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

ரயிலில் பயணத்தின்போது அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரயில்வே பயணிகளுக்கான பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ரயில் பயணத்தின்போது சத்தமாகப் பாடல் கேட்பது மற்றும் வீடியோ பார்ப்பது போன்ற செயல்கள் சக பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றன. எனவே, அவ்வாறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தின்போது, குறிப்பாக இரவு நேரங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும்போது, மற்றவர்களின் தூக்கம் பாதிக்கப்படும் வகையில் செல்போன் பயன்படுத்தினால் ரூபாய் 1,000 அபராதம் விதிக்கப்படும். அல்லது ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டு பயணச்சீட்டு (டிக்கெட்) ரத்து செய்யப்படலாம். ரயில்வே அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து தொந்தரவு செய்தால், 6 மாத சிறைத் தண்டனையுடன் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

1989 ஆம் ஆண்டு ரயில்வே சட்டத்தின் 145(2)-ன் கீழ், ஜன விஸ்வாஸ் (Jan Vishwas) சட்டத்திருத்தம் மூலம், இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய தொந்தரவு குறித்து பயணிகளுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் புகார்கள் இருக்கும் பட்சத்தில், 139 என்ற உதவி எண்கள் மூலமாகவோ அல்லது ரயில்களில் உள்ள டிக்கெட் பரிசோதகர்கள் மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், ரயில் பயணம் செய்யக்கூடிய அனைவரும் பிற பயணிகளுடைய வசதிகளையும் அமைதியையும் கருத்தில் கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Source: Read Full Article