தமிழ்நாட்டை சொந்த ஊராகக் கொண்டு, வேலை நிமித்தமாகவோ அல்லது வாழ்வாதாரம் காரணமாகவோ, வெளி மாநிலங்களில் வசித்து வரும் பெண்கள், பிரசவத்திற்காக சொந்த ஊர் திரும்பி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பெற்றெடுத்தால், அவர்களுக்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்டத்தின் கீழ், ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்ட அறிக்கை

இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் நிபந்தனைகளின்படி, பிரசவித்த தாயார் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் என உள்ளது. இதனை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

புதிய வழிகாட்டுதலின்படி, குழந்தையின் தாயார், தமிழகத்தில் பிறந்து, திருமணமாகி, வெளிமாநிலம் சென்றிருந்தாலும், அவரின் பெற்றோர் தமிழகத்தில் நிரந்தரமாக வசித்து வந்தால், அந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். அவர்கள், தமிழகத்தில் வசிப்பதற்கான உரிய ஆதாரங்களை சம்ப்பிக்க வேண்டும். இது ஜூன் 22-ம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு பொருந்தும்“ என அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் நிபந்தனைகள் என்ன.?

தமிழ்நாடு அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் பெறுவதற்கு, குழந்தை கட்டாயம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்திருக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும், சுகாதாரத்துறையின் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) RCH ID பெற்றிருக்க வேண்டும்.

பிரசவம் முடிந்து தாய் மற்றும் சேய் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லும்போது, 22 காரட் எடையுள்ள ஒரு கிராம் தங்க மோதிரம் நேரடியாக அவர்களிடமே வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையால் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் நிபந்தனையில் தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, வெளி மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான தமிழ் குடும்பங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article