சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், முதற்கட்டமாக, 2 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஆவின் மாநில ஆய்வக துணைக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்த ஆய்வகமானது, நவீன உபகரணங்களின் உதவியுடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் தேவைகளுக்கான அனைத்துத் தரப் பரிசோதனைகளைத் துல்லியமாகவும், விரைவாகவும், சர்வதேச தரநிலைகளுக்கு இணங்கவும் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பால் பண்ணையில் ஆய்வு

தொடர்ந்து, மாதவரம் பால் பண்ணையில் உள்ள பால் உற்பத்தி நிலையத்தை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர், பால் கொள்முதல் முதல் பதப்படுத்துதல் வரை நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், உற்பத்தியாகும் பாலின் தரம், வெண்ணெய் குளிரூட்டும் நிலை, பால் பவுடர் கையிருப்பு உள்ளிட்ட விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, மாதவரம் பால்பண்ணை பிரதான சாலையில் 152 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் நியூ ஆவின் டெய்ரி பிளான்ட் என்ற‌ புதிய ஆவின் பால் பண்ணை நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

பால் உற்பத்தியை பெருக்குவதற்கு கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த புதிய நிலையம், 7 ஏக்கர் பரப்பளவில், 7 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவு கொண்டதாக அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். முதல்வர் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை இரு புறம் நின்றிருந்த பொதுமக்களை பார்த்து கை அசைத்தபடி முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மாதவரம் பால் பண்ணை

மாதவரம் பால் பண்ணையானது மிகப் பழமையான பால்பதன நிறுவனமாகும். இந்நிறுவனம் 1963-ஆம் ஆண்டு, அரசு மற்றும் யுனிசெஃப் (UNICEF) ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் மூலம் மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் பதப்படுத்தும் திறனுடன் நிறுவப்பட்டது. இதன் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, தற்போது நாளொன்றுக்கு சுமார் 4.50 இலட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் திறன் பெற்றுள்ளது. நுகர்வோரின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சராசரியாக 120 வாகனங்கள் மூலம் வடசென்னைப் பகுதிகளில் பால் விநியோகப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Source: Read Full Article