சென்னை : திமுக ஆட்சியில் ஊழல் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நில மதில் சுவர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட்டு, கட்டப்பட்டு வரும் மதில் சுவரை இடித்து அகற்ற வேண்டும்; இல்லையெனில் பொதுமக்களின் வீடுகளும் உடைமைகளும் பெரும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் எனக் கூறப்படும் நிலையில் இத்திட்டம் நடைபெறும் பகுதியை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டு, பத்திரிகையாளர்களை சந்தித்தார்..

கடந்த திமுக ஆட்சி காலத்தில் இந்த சதுப்பு நிலத்தை தடுத்து மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு 10 அடி உயரத்திற்கு உலக வங்கி கடன் மூலமாக திமுக அரசு கட்டிக் கொண்டிருந்தது. அந்த தடுப்பு சுவருக்கு அருகில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபாதை ஒன்றும் அமைத்தார்கள். உலக வங்கியிடம் கடன் பெற்று சட்டத்திற்கு எதிரான இந்த திட்டத்தை கடந்த திமுக அரசு கொண்டு வந்தது.

அதே திட்டத்தை இந்த த.வெ.க அரசு தொடர்கிறது.. கடந்த திமுக ஆட்சியில் 'நெய்தல் மீட்பு இயக்கம்' என்று தொடங்கி கடலோரத்தில் இருக்கக்கூடிய 14 மாவட்டங்களில் 1076 கி.மீ. நீளத்தில் அந்த பகுதியில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஒரு திட்டத்தை கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் 2024 தொடங்கினார்கள் இதற்கு உலக வங்கி இடம் ரூ.1674 கோடி ரூபாய் கடன் பெற்றார்கள் அந்த பணத்தில் தான் இந்த திட்டம் வனத்துறை சார்ந்து 21 அரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இந்த பள்ளிக்காரணையில் ஒரு பெரிய தடுப்பு சுவர் மற்றும் நடைபாதை ஆகியவை கட்டப்படுகிறது.

ஆனால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எந்த விதமான கட்டுமானமும் இருக்கக் கூடாது என பசுமை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தீர்ப்புகள் இருக்கின்றது. ஆனால் விதிகளை மீறி சீனப் பெருஞ்சுவர் போல இவ்வளவு பெரிய கட்டுமானத்தை தமிழக அரசே 21 கோடி ரூபாய் பணத்தை வீணடித்து செய்து வருகிறது. இந்த திட்டத்தை பொதுமக்கள் யாரும் கேட்கவில்லை; பணத்தை கொள்ளை அடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக திமுக ஆட்சியில் இப்படி ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வந்து ஆய்வு செய்து தமிழக அரசுக்கு வலியுறுத்திய பின்பும் இன்று திட்டம் தொடரப்படுகிறது. இன்னும் வேகமாக நடைபெற்று வருகிறது இது எதற்காக இந்த திட்டத்தை எவ்வளவு வேகமாக செயல்படுத்த துடிக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. சட்டத்திற்கு எதிரான இந்த திட்டத்தை ஏன் தொடர வேண்டும் என்று புரியவில்லை.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது சென்னை மக்களுக்கு 'கருப்பண்ணன் சாமி போல' சென்னை மக்களுக்கான பாதுகாப்பு தான் இந்த நிலம். சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அந்த தண்ணீர் எல்லாம் இந்த சதுப்பு நிலம் மூலமாக கடலுக்கு சென்று விடும் கோடை காலத்தில் நிலத்தடி நீராக பயன்படுகிறது. அவ்வளவு பயனுள்ளது இந்த சதுப்பு நிலம்.

நூறாண்டுகளுக்கு முன்பு 15 ஆயிரம் ஏக்கராக இருந்த இந்த சதுப்பு நிலம் தற்போது 2500 ஏக்கராக சுருங்கி விட்டது. மீதம் இருக்கக்கூடிய இந்த நிலத்தையாவது பாதுகாக்க வேண்டும் என நாங்கள் துடித்துக் கொண்டிருக்கிறோம்.

இது மிகப்பெரிய ஊழல் திட்டம் தமிழக அரசு இதை உடனடியாக நிறுத்த வேண்டும் இந்த தடுப்பு சுவரையும் நடைபாதையும் உடைத்து அப்புறப்படுத்த வேண்டும். தடுப்பு சுவர் கட்டிய பிறகு சுற்றுவட்டார குடியிருப்புகளில் அதிகமான தண்ணீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் என்னிடம் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் அதிக தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு அதிகம் பெருகிவிட்டது எதனால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு விதமான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் கேட்பது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வரையறை (Notify)செய்யுங்கள். இந்த 2500 ஏக்கர் சதுப்பு நிலம் எங்கே இருக்கிறது அதனுடைய எல்லைகள் என்ன என்று வரையறை செய்து கொடுங்கள் என்று கேட்கிறோம் ஆனால் தமிழக அரசு அதை செய்ய மறுக்கிறது. இரண்டு முறை நீதிமன்றம் சொல்லிவிட்டது ஆனாலும் தமிழக அரசு செய்ய மறுக்கிறது.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த தவறான திட்டத்தை த.வெ.க அரசும் ஏன் தொடர்ந்து செய்கிறது என எங்களுக்கு புரியவில்லை. இந்த திட்டத்தால் ஏற்படும் ஆபத்து என்ன என்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது அப்போதும் த.வெ.க அரசு கேட்க மறுப்பது ஏன்?

உலக வங்கி இடம் கடன் வாங்கி இந்த சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து நடைபாதை கட்ட வேண்டிய அவசியம் என்ன இந்த பகுதி மக்கள் உங்களிடம் நடைபாதை கேட்டார்களா? மீனவ மக்களை பாதுகாக்க மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தான் உலக வங்கி கடன் கொடுத்துள்ளது. இந்த நடைபாதைக்கும் மீனவர்களின் மேம்பாட்டிற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? இது ஊழல் செய்வதற்காக மட்டுமே போடப்பட்ட நடைபாதை..

ஆனால் முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும். இந்த சுற்றுச்சூழலை உடை தெரிய வேண்டும். உடனடியாக இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தவில்லை என்றால் என்னுடைய தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது இயற்கை கொடுத்த பொக்கிஷம் இயற்கை நமக்கு கொடுத்த வரம் ஏற்கனவே பல ஏக்கர் நிலத்தை நாம் அழித்து விட்டோம் மீதம் இருக்கக்கூடிய இந்த 2500 ஏக்கர் நிலத்தையாவது நாம் பாதுகாக்க வேண்டும்.

இந்த தடுப்பு சுவர் அப்படியே இருந்தால் பொதுமக்களுடைய வீடு உடைமைகள் உள்ளிட்டவை எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை இன்னும் சில மாதங்களில் வெள்ள பாதிப்பில் நீங்கள் நேரடியாக பார்க்கத்தான் போகிறீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source: Read Full Article