"தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. மக்கள் பிரச்சினைகளில் தமிழ்நாடு அரசு உடனே கவனம் செலுத்த வேண்டும்" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

மின்வெட்டு குறித்து பேசும்போதே போன கரண்ட்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே நல்லூரில் அமைந்துள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விலைவாசி உயர்வு குறித்து தங்களிடம் கேள்வி கேட்பதை விடுத்து மாற்றம் வேண்டும் என வாக்களித்த மக்கள் தான் அதிகம் பேச வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சினை அதிகரித்து வருகிறது எனவும், தான் பங்கேற்ற நிகழ்வில் கூட 10 முறை மின்வெட்டு ஏற்பட்டதாக கூறினார். பிரேமலதா பேட்டி கொடுத்து கொண்டிருந்தபோதே மின் தடை ஏற்பட்ட நிலையில், திடீரென பேச்சை நிறுத்தினார். பின்னர் மின்சாரம் வந்ததால் மீண்டும் பேச்சை தொடர்ந்தார்.

எதிர்க்கட்சியினர் கைது, சோதனை குறித்த கேள்விக்கு, விஜயகாந்த் கூறியது போல உப்பை தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும், தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், ஊழல் என்ற ஒன்று நடந்திருந்தால் வழக்கு விசாரணையில் நிரூபித்து பின்னர் தண்டனை பெற்றுத் தரட்டும் என பதில் அளித்தார். ஒருபுறம் பேருந்தில் இலவசம் என்ற நிலையில், மறுபுறம் ஆட்டோ கட்டண உயர்வு என்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். செய்முறையோடு சேர்ந்த பாடத்திட்டம் இருந்தால் கல்வி முறைக்கு நல்லதாக அமையும் என்றார். சட்டம், ஒழுங்கு என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவும், தினந்தோறும் கொலைகள் அரங்கேறி வருவதாக சாடினார்.

தனுஷ் அரசியல் வருகை - மறுத்த பிரேமலதா

செஞ்சியில் காணாமல் போன குழந்தை இன்னமும் கண்டுப்பிடிக்கவில்லை என்றார். சிறையில் இருந்தே 17 கைதிகள் தப்பியோடுகிறார்கள் என்றால் சட்டம் ஒழுங்கு எங்கு உள்ளது என வினவினார். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான தமிழ்நாடு காவல்துறை தற்போது என்ன செய்கிறது என கேள்வி எழுப்பினார். சட்டம் ஒழுங்கில் மட்டும் கவனக்குறைவு என்பதல்ல, சிறை பாதுகாப்பில் கூட கவனக்குறைவு என்றார். ஒருபுறம் அரிசி விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மறுபுறம் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகள் மழையில் நனைந்து முளைக்கும் அவலம் அரங்கேறி வருவதாக வேதனை தெரிவித்தார். மழையில் நனைந்து வீணாவதை தடுத்தாலே விலைவாசி குறைக்கலாம் என்றார். அரிசி பதுக்கல் சம்பவங்களும் அரங்கேறுவதாக கூறினார். மேலும் ரேஷன் அரிசி அண்டை மாநிலத்திற்கு கடத்தப்படுவதாகும் குற்றம் சாட்டினார்.

ஒருபுறம் 35 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல், வரலாற்றில் இல்லாத வகையில் மின் கட்டண உயர்வு, மறுபுறம் அறிவிக்கப்படாத மின்வெட்டு என அவல நிலை அரங்கேறுவதாக சாடினார். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார். அரிசி விலை, ஆவின் பொருட்கள், மின் கட்டணம் என விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழ்நாட்டில் காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடித்து மக்கள் பிரச்னைகளில் தமிழ்நாடு அரசு உடனடியாக கவனம் செலுத்திட வேண்டும் எனவும் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து புறப்பட்டார்.

Source: Read Full Article