மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கு - முன்னாள் மண்டலத்தலைவரின் கணவரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்.

கைது நடவடிக்கையின் போது முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர்

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான சொத்து வரி வசூல் தொடர்பாக 2022 முதல் 2024 ஜூலை 31 வரையிலான காலக்கட்டத்தில் ஆய்வு நடத்தியபோது அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி முறைகேடு செய்தது ஆய்வில் தெரியவந்தது. இந்த வழக்கானது மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் மற்றும் நகரமைப்பு குழு, வரிவிதிப்பு குழு தலைவர்கள் ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டிஐஜி அபிநவ்குமார் தலைமையிலான சிறப்பு படை விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவர் பொன்.வசந்த், மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர்கள், உதவி ஆணையாளர் என மொத்தமாக 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொய்யான வழக்கு பதிவு

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னாள் மண்டலத்தலைவர் புவனேஸ்வரியின் கணவர் சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர். காலை 8 மணி முதல் 7 மணி நேரமாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சரவணனை அழைத்து சென்றபோது வாகனத்தில் ஏற்றும்போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் வாகனத்தில் ஏறுவதில் சிரமம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவாகி காவலர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சரவணனை கைது செய்து அழைத்துச் சென்றபோது செய்தியாளர்களை பார்த்த சரவணன் தாவீக அரசு பழிவாங்கும் நோக்கில் தனது மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் திமுகவினர் மீது பழி வாங்குவதற்காக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் இதனை பார்த்து நாங்கள் அஞ்ச மாட்டோம் எனவும் தெரிவித்தார்

சரவணன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை புதூர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு சொத்து வரி குறைத்து மதிப்பீடு செய்வதற்கு உதவியதாக சரவணன் மீது புகார் எழுந்த நிலையில் மருத்துவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சரவணன் மத்திய குற்ற பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் ஜெயராமன் சவால் விடுத்து வந்த நிலையில் மீண்டும் சொத்துவரி முறைகேடு வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மண்டல தலைவரின் கணவர் சரவணன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Source: Read Full Article