மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை வரை செல்லாமல் சம்பா பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருவதாகவும் அதனை தவெக அரசு கண்டுகொள்ளவில்லையென்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூடர் கூட்டம் என விமர்சனம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மூடர் கூட்ட அரசின் விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்! மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேராமல் சம்பா பயிர்கள் காய்கின்ற நிலையில், தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படவுள்ளதால் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படாததால் ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்தது. இப்போது சம்பாவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், செப்டம்பர் 1-ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக கொஞ்சம் தாமதமாக தண்ணீர் திறக்க வேண்டும் - அப்போது தான் நெல்மணி முளைத்து வருகின்ற காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் நடைமுறை சிக்கல் புரியாமல், Reels வெறி கொண்டு அவசரகதியில் இந்த Dummy CM தண்ணீர் திறந்துவிட்டார். இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன.

எந்த திட்டமிடலும் இல்லை - உதயநிதி

எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் - விவசாயிகளின் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு குறுவை - சம்பா இரண்டையும் இல்லாமல் செய்திருக்கிறது இந்த கோமாளி சர்க்கார். ஏற்கனவே அரிசி - பருப்பு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தினத்தந்தியின் இன்றைய முதல் பக்க தலைப்புச்செய்தியே விலைவாசி உயர்வு பற்றித்தான் என்பது முதல்வருக்கு தெரியாதா? இப்படிப்பட்ட சூழலில் நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியாளர்களால், உணவு உற்பத்தி மேலும் பாதித்து, விலைவாசி இன்னும் உயருகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு செயலாளர் இல்லாததை நாம் சுட்டிக்காட்டிய பிறகு, வேளாண் செயலாளரை நியமித்த முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்கான Review Meeting-ஐயும் நாம் சொன்ன பிறகு தான் நடத்துவாரா? இப்பிரச்சினை குறித்து உடனே ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் இந்த ஆட்சியாளர்கள் உடனடியாக வழங்க வேண்டும்’ என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article