குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளிகளில் கேக் வெட்டிக் கொண்டாடவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சாப்பிடும் வகையில் அவர்களுக்கு வழங்கவும் 9 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டிருக்கிறது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு. ஆனால், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவுத் திட்டத்தில் கொடுக்கப்படும் கொண்டக்கடலை, பச்சை பருப்பு ஆகிய அடிப்படையான, உடலுக்கு ஆற்றல் அளிக்கக் கூடிய உணவுப் பொருட்களை கொள்முதல் செய்யாமல் தவெக அரசு தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொண்டக்கடலையும் பச்சை பயிறும்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவுச் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வார செவ்வாக்கிழமைகளில் மாணவர்களுக்கு சாதம் மற்றும் தக்காளி மசாலா முடையுடன் கொண்டக்கடலை கிரேவி தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது. அதே மாதிரி 2 மற்றும் 4வது வார வியாழக்கிழமைகளில் எலுமிச்சை சாதத்துடன் சேர்த்து பச்சை பயிறு சுண்டல் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக உணவுத்துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக டெண்டர் விடப்பட்டு கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதல் செய்யப்பட்டு சத்துணவுத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அடிப்படையை கொள்முதல் செய்யாமல் ஆடம்பரமான கேக்கிற்கு டெண்டரா?

ஆனால், தவெக ஆட்சி அமைந்தது முதல் மாணவர்களுக்கு ஊட்டச்சத்திற்காக சத்துணவில் வழங்கப்படும் கொண்டக்கடலை மற்றும் பச்சை பயிறு ஆகியவற்றை இதுவரை கொள்முதல் செய்யவில்லையென்றும், விடப்பட்ட டெண்டரும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கொண்டக்கடலை மற்றும் பச்சை பயிறு ஆகியவற்றை கொள்முதல் செய்ய டெண்டரில் பங்கேற்ற ஒப்பந்தத்தாரர்களிடம் விலை தொடர்பாக பேச்சுவார்த்தையை அதிகாரிகள் இதுவரை முறையாக இதுவரை நடத்தவில்லையென்றும், அதனால் மாணவர்களுக்கான அடிப்படையாக வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்திற்காக கொண்டக்கடலையும், பச்சைப்பயிறுவிற்கும் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் பகீர் கிளப்பி வருகிறார்கள் சத்துணவுத் துறை ஊழியர்கள்.

சர்ச்சைகளில் சிக்கி வரும் உணவுத்துறை

ஏற்கனவே, உணவுத்துறையின் கீழ் இயங்கிவரும் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகம் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு சத்துணவில் முக்கிய காரணியாக தரப்படும் கொண்டக்கடலை, பச்சை பயிறு ஆகியவற்றை கூட முறையாக கொள்முதல் செய்யாத நிலையில், தற்போது குழந்தைகள் தினத்திற்கான கேக் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

மந்தம், மெத்தனம், அலட்சியம்

பாமாயில் கொள்முதலில் மந்தம், சர்க்கரை கொள்முதல் செய்வதற்கு டெண்டர் விட்டு ரத்து, மீண்டும் டெண்டர், நெல் கொள்முதல் செய்வதில் சுணக்கம் என அத்தியாவாசிய பொருட்களை கொள்முதல் செய்து, மக்களுக்கு தரும் முக்கியமான துறையான உணவுத்துறை, அதிகாரப் போட்டியில் சிக்கி திணறிவருவதாகவும், இதுவே தொடர்ந்தால் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் எச்சரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

TNCSC விளக்கம் என்ன ?

இது தொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் வாட்ஸ் – அப் மூலம் விளக்கம் கேட்டோம். அதற்கு அவர், எந்த விளக்கமும் தரவில்லை. அவருக்கு போன் செய்தோம். ஆனாலும் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

Source: Read Full Article