ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம் என இந்தியக் குடிமக்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆனாலும் தொடர்ச்சியாக இந்த விஷயம் நடைபெற்று வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முயற்சிகளின் விளைவாக, ரஷ்ய ஆயுதப் படைகளிடமிருந்து 139 இந்தியர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, “தங்களுக்குக் கிடைக்கும் பணப் பலன்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், பின்னர் இந்திய அரசை அணுகி விடுதலையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நம்பி, தனிநபர்கள் தாங்களாகவே முன்வந்து ரஷ்ய ஆயுதப் படைகளில் சேருவதற்கான வாய்ப்புகளை நாடும் எண்ணற்ற நிகழ்வுகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என தெரிவித்துள்ளது.

மேலும், இது ஒரு ஆபத்தான பாதை. ரஷ்யாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, முகவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் இந்தியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவருகிறது. தனிநபர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் இந்தியக் குடியுரிமையைத் துறந்து, ரஷ்ய கடவுச்சீட்டைப் பெற்று, பின்னர் ரஷ்ய ஆயுதப் படைகளில் சேர்வதற்காக இந்திய அதிகாரிகளை அணுகிய பல சம்பவங்களும் நடந்துள்ளன.

அத்தகைய தனிநபர்கள் இதுபோன்ற செயல்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அதனால் தங்களுக்கு ஏற்படக்கூடிய உயிருக்கு ஆபத்தான அபாயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்தியக் குடிமக்கள், குறிப்பாக வெளியுறவு அமைச்சகத்தில் பதிவு செய்யப்படாத ஆட்சேர்ப்பு முகவர்களிடமிருந்து வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ரஷ்ய ஆயுதப் படைகளில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் விரைவான பணிவிடுவிப்பை உறுதி செய்வதற்காக, இந்திய அரசு ரஷ்யத் தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய இராணுவப் பிரிவுகளில் சமையல்காரர்கள், உதவியாளர்கள் போன்ற துணைப் பணியாளர்களாக இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி விடுப்பு செய்யும் முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் அரசுப் பணிகள் தருவதாக வாக்குறுதியளித்து, ரஷ்ய இராணுவ சேவையில் கட்டாயப்படுத்தப்பட்டதாக பல இந்தியர்கள் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article