பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், சம்பந்தப்பட்ட காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கழுங்குதுறை பேருந்து நிறுத்தத்தில் இரவு நேர பாதுகாப்பு கேள்விக்குறி!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இருந்து பரமக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கழுங்குதுறை பேருந்து நிறுத்தம், இளையான்குடி செல்லும் சாலையுடன் இணையும் முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது. மானாமதுரையில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் பேருந்து சேவை இரவு 7 மணிக்கு மேல் குறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், இளையான்குடி செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் கழுங்குதுறை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் தங்களது கிராமங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

பயணிகள் இறங்கும்போது விசில் அடிப்பதாகவும் சுற்றுவட்டார கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்

இந்நிலையில், இரவு நேரங்களில் பேருந்து நிறுத்தம் பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியிருப்பதாகவும், பேருந்துகளில் இருந்து பயணிகள் இறங்கும்போது விசில் அடிப்பதாகவும் சுற்றுவட்டார கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், விசில் அடித்த பின்னர் சிலர் சாலையில் குழுவாக நின்று பயணிகளை கண்காணிப்பதாகவும், குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை வழிமறித்து, அவர்களிடம் இருப்பதை கொடுத்துவிட்டு செல்லுமாறு மிரட்டியதாகவும் சிலர் கூறுகின்றனர். இதுபோன்ற தகவல்கள் காரணமாக, அந்த பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பேருந்தில் இருந்து இறங்கும் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பயணிகள் அச்சத்துடனேயே தங்களது கிராமங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு குறித்த அச்சம்

மேலும், இரவு நேரங்களில் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சிலர் அங்கு வந்து செல்வதாகவும், இதனால் பேருந்து நிறுத்தம் மற்றும் இளையான்குடி சாலை சந்திப்பு பகுதியில் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, கழுங்குதுறை பேருந்து நிறுத்தம் மற்றும் இளையான்குடி சாலை சந்திப்பு பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ச்சியான போலீஸ் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், முக்கியமான இந்த சந்திப்பு பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இரவு நேரங்களில் போதிய போலீஸ் கண்காணிப்பை ஏற்படுத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோச்சடை, T.புதுக்கோட்டை, கணபதியேந்தல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் கூறுகையில், “இரவு நேரங்களில் பேருந்தில் இறங்கி செல்லும்போது பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல வேண்டும். அதற்கான போலீஸ் கண்காணிப்பு மற்றும் சிசிடிவி வசதிகளை ஏற்படுத்தினால் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்” என தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், சம்பந்தப்பட்ட காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source: Read Full Article