இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாகவும் பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

திமுக, அதிமுகவுடன் மோதல் இல்லை

அதன் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்ற வெறித்தனமான ஆர்வம் தனக்கு இருப்பதாகக் கூறினார்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் இருப்பது அரசியல் ரீதியான போட்டி மட்டுமே என்றும், தனிப்பட்ட முறையில் எந்தவிதமான மோதலும் இல்லை என்றும் தெரிவித்தார். திமுகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்கப்போவதாக வெளியான தகவல்களைக் கிளப்பிவிட்டது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்தான் என்றும் குற்றம்சாட்டினார்.

நாதக - தவெக போட்டியிட்டால் என்ன?

சீமானுக்கு ஆதரவு அளிப்பது குறித்து தேர்தல் வரும்போது தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு, அது அவரது பெருந்தன்மையைக் காட்டுவதாகப் பதிலளித்தார். கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிட்டன. அதேபோன்று இந்த முறை நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிட்டால் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், இடைத்தேர்தலில் திமுகவும், அதிமுகவும் தனக்கு ஆதரவு அளித்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என்றும் சீமான் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Source: Read Full Article