திருப்பத்தூர்: வாணியம்பாடியில் ஜவுளிக் கடை நடத்தி வரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறு வியாபாரியை மிரட்டிய வணிகர்கள், ஊழியர்களை உள்ளே வைத்து, கடையை வலுக்கட்டாயமாக மூடிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையை மூட வேண்டி கொலை மிரட்டல்

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் புர்கான் (42). இவர் தனது குடும்ப வாழ்வாதாரத்திற்காகத் தமிழகத்திற்கு வந்து, வாணியம்பாடி வாரச் சந்தை சாலையில் 14 ஆம் தேதி 'வாணியம்பாடி சூரத் கசானா' என்ற பெயரில் பெண்களுக்கான ஆடை விற்பனைக் கடையைத் தொடங்கி, மலிவான விலையில், நடத்தி வரும் நிலையில், நேற்று மதியம் கடைக்குள் புகுந்த ஐந்து நபர்கள், "வெளிமாநிலத்திலிருந்து வந்து இங்கு கடை நடத்துகிறாயா?" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், புர்கானை கரூர் வைஸ்யா வங்கி அருகே வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, "கடையை மூட வேண்டும்; இல்லையெனில் கத்தியால் குத்திக் கொன்றுவிடுவோம்; பெண்கள் விஷயத்தில் பொய்யான புகார் அளித்து முடக்கிவிடுவோம்" என்று ஹிந்தியில் மொழிபெயர்த்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

உயிர்தப்பிய தொழிலாளர்கள்

இதனைத் தொடர்ந்து, இன்று காலை புர்கான் கடையில் இல்லாத நேரத்தில், சுமார் 25-க்கும் மேற்பட்ட நபர்கள் கடைக்குள் அத்துமீறி நுழைந்து துணி எடுக்க வந்த பெண்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு, கடையில் இருந்த தொழிலாளர்களை மிரட்டித் தாக்கி, ஊழியர்களை கடையின் உள்ளேயே வைத்து, ஷட்டரை இழுத்து மூடிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் தொழிலாளர்கள் பின்பக்க வழியாக வெளியேறி உயிர் தப்பியுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட வியாபாரி புர்கான், வணிகப் போட்டி மற்றும் வெளிமாநிலத்தவர் என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இக்கும்பல் தங்களை அச்சுறுத்துவதாகவும் தன் உயிருக்கும், குடும்பத்திற்கும், தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், கடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் புர்கான் புகார் மனுவை அளித்துள்ளார்.

வெளிமாநிலத்தவர் புதியதாக கடை வைத்து மலிவான விலையில், வியாபாரம் செய்ததால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி, வடமாநில தொழிலாளர்களை கடையில் வைத்து, பூட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article