சென்னை: மதம் மாறிய மக்களுக்கும் இட ஒதுக்கீட்டு உரிமை நீடிப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மத்திய அரசு உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளை சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றம் அளித்துள்ள சமூகநீதியின் அடித்தளங்களை தகர்க்கும் வகையில் அமைந்திருப்பதால், மதம் மாறிய மக்களின் சமூகநீதி உரிமைகளைப் பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2015&ஆம் ஆண்டில் இஸ்லாமிய மதத்திற்கு மாறி, அந்த மத பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து தமக்கு பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு 2016&ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்து விட்டது. அதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினாலும் அவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்கலாம் என 2024&ஆம் ஆண்டில் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தீர்ப்பளித்ததுடன், இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும் செல்லாது என அறிவித்தது.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததுடன், மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீட்டு உரிமையைக் கோர முடியாது என்று நேற்று தீர்ப்பளித்துள்ளது.

மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்பதற்காக உச்சநீதிமன்றம் கூறியுள்ள காரணம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்து மதத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்து, அதன் சமூக பின்தங்கிய நிலைக்காக இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் ஒருவர், மதம் மாறும் போது அவரது சமூகத்தின் பின்தங்கிய நிலையை தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது; அதனால், அவரது இட ஒதுக்கீடு பெறும் உரிமை அவர் முதலில் சார்ந்திருந்த மதத்துடன் முடிவடைந்து விடுகிறது என்பது தான். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இது சரி தான் என்றாலும், சமூக நிலைச் சூழலின் அடிப்படையில் பார்க்கும் போது இது சரியல்ல.

இந்தியாவில் சாதியின் அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது ஒருவரின் சமூக பின்தங்கிய நிலையின் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. இந்து மதத்தின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகங்களைச் சேர்ந்தவர்களின் சமூக நிலை, வேறு மதத்திற்கு மாறினாலும் அப்படியே தான் தொடர்கிறது; அதில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. அதேபோல், மத மாற்றங்கள் அனைத்தும் சமூகநிலையை உயர்த்திக் கொள்வதற்காக நடைபெறுவதில்லை. இத்தகைய சூழலில், ஒருவருக்கு சாதியின் அடிப்படையில் வழங்கப் படும் இட ஒதுக்கீடு, மதங்களைக் கடந்தும் வழங்கப்படுவது தான் சரியாகவும், சமூகநீதியாவும் அமையும்.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் எந்த இட ஒதுக்கீடும் மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. அதற்கு காரணம் மதங்களின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதில்லை; சாதிகளின் அடிப்படையில் தான் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன என்பதால் தான். இட ஒதுக்கீடு வழங்குவதற்காக பயன்படுத்தப்படாத மதம், இட ஒதுக்கீட்டைப் பறிப்பதற்காகவும் பயன்படுத்தப்படக் கூடாது. அது தான் உண்மையான சமூகநீதி.

மதம் மாறிய பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 342(1)&இன் படி 1950&ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு (பட்டியலின) ஆணையின் படி முறைப்படுத்தப்படுகிறது. மதம் மாறிய பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து தெளிவற்ற சூழல் தான் நிலவி வருகிறது. அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) திருத்த ஆணை 1950ன்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைச் சேர்ந்த எவரும் பட்டியலின சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது. ஆனால், 1956ஆம் ஆண்டு சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும் 1990ஆம் ஆண்டு பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும், பட்டியல் சாதியினராகச் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற உரிமை கிறித்தவ மதத்தை மாறிய பட்டியலினத்தவருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்; பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் பொருத்தவரை, மதம் மாறினாலும் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பது தான் சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களின் நிலைப்பாடு.

பட்டியலினம், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆகியவற்றைச் சேர்ந்த மதம் மாறிய மக்கள் தங்களின் இட ஒதுக்கீடு உரிமை தொடர வேண்டும் என்று பல பத்தாண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சட்டமன்றங்கள், நாடாளுமன்ற அவைகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பல்வேறு தருணங்களில் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இந்தக் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து மதம் மாறிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் அவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை தொடரும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு உரிய வழிகளில் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article