தஞ்சாவூர்: தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் அம்மாபேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.முகமது இப்ராஹிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் கே.மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எம்.எஸ்.ஆனந்தன் வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சுமதி, வலங்கைமான் ஒன்றியத் தலைவர் சாந்தி, அரியலூர் மாவட்டத் துணைச் செயலாளர் காட்டுராஜா, திருவையாறு ஒன்றியத் தலைவர் க.தண்டாயுதபாணி, அரியலூர் மாவட்டப் பொருளாளர் தனசெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.முகமது இப்ராஹிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், மாநிலப் பொருளாளர் சி.கிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் பவுல்ராஜ், மாநிலத் துணைத் தலைவர் எம்.ஜெயக்குமார், மாநில அமைப்புச் செயலாளர் சுக.சரவணன், தஞ்சாவூர் மாவட்டப் பொருளாளர் அருணாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் சேக்தாவூத், அய்யம்பேட்டை நகரத் தலைவர் ஜெய்னுலாதீன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, வட்டார, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிய நிர்வாகிகள் நியமனம்

இந்தச் செயற்குழு கூட்டத்தில் சங்கத்தின் அமைப்புப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவராக எம்.எஸ்.ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.

மாவட்டத் துணைத் தலைவராக ரவிச்சந்திரன், அம்மாபேட்டை ஒன்றிய மகளிர் அணிச் செயலாளராக அனுசியா, ஒன்றியப் பிரதிநிதியாக அமல்தாஸ், ஒன்றிய மகளிர் அணித் துணைச் செயலாளராக இளவரசி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மேலும், ஒன்றியச் செயலாளராக முருகேசன், ஒன்றியத் தலைவராக அருள்தாஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். பாபநாசம் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் கோ.சதிஷ் நன்றி கூறினார்.

சங்கத்தின் பல்வேறு நிலைகளில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் அமைப்புப் பணிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை உடனடியாக முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், சென்னை முதலமைச்சர் இல்லம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்குபெறும் தொடர் வாழ்வாதாரப் போராட்டம் நடத்தப்படும்.

மேட்டூர் அணையில் இருந்து போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததாலும், கர்நாடகாவிடமிருந்து உரிய தண்ணீரைப் பெற முடியாததாலும் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மற்றும் கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களை 'வறட்சி மாவட்டங்களாக' அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹35,000 வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்கத் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மத்திய அரசும் உரிய தீர்வு காணத் தவறினால், அடுத்தகட்டப் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்.

பருவமழை பொய்த்ததால் வடமாநிலங்களில் நெல் உற்பத்தி குறைந்து, அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், அனைத்து ரேஷன் கடைகளிலும் 'சன்னரக அரிசி' விநியோகம் செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வரும் 22.10.2026 (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article