காச நோய் இல்லா இந்தியா இயக்கதினை - 'ஜோஷ்' (JOSH TEAM) மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி, தொடங்கி வைத்தார்.

காசநோய் இல்லா இந்தியா இயக்கம் துவக்க விழா

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(08.10.2026) காசநோய் இல்லா இந்தியா இயக்கம் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி, தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் காசநோய் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து 2025-ஆம் ஆண்டில் காசநோய் இல்லாத 24 ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், காசநோய் ஒழிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற தன்னார்வ மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தெரிவித்ததாவது, காசநோய் இல்லா இந்தியா இயக்கத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, காசநோய் ஒழிப்பில் இளைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக 'ஜோஷ்' (JOSH - Joint Squad for Health) அணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அணிகள் காசநோய் தொற்று குறித்து வீடு தோறும் நடைபெறும் கணக்கெடுப்பில், மை பாரத் (My Bharat) தன்னார்வலர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர் (NCC) இணைந்து கண்காணிப்பு அலுவலரின் மேற்பார்வையில் மதிப்பீடு செய்வார்கள். இம்முயற்சியின் மூலம் சமூகத்தின் பங்கேற்பை வலுப்படுத்துவதுடன், காசநோய் அறிகுறிகள் உள்ளவர்கள் தாமதமின்றி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, உரிய நோயறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளைப் பெற ஊக்குவிக்கப்படுவார்கள்.

மறைமுக காசநோயின் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள இந்தியாவில் மக்கள் வெளியே தெரியாத மறைமுக காசநோயின் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030ம் ஆண்டிற்குள் காசநோயை ஒழித்துவிட வேண்டும் என்கிற நோக்கில் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 1450 காசநோய் பயனாளிகள் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 11 காசநோய் அலகுகளிலும் CBNAAT காசநோய் சளி பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் (X -Ray) வீடுகளுக்கே சென்று இலவசமாக பரிசோதனை செய்யப்படுகின்றது. 2030-ஆம் ஆண்டிற்குள் காசநோயை முடிவுக்கு கொண்டு வர முனைப்புடன் செயல்படும் அரசோடு, அனைத்து அரசு, தனியார் துறைகள், இளைஞர்கள் மற்றும் சமூக நல அக்கறை உள்ள நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.அமுதா ராணி, மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.யசோதாமணி, துணை இயக்குநர் (காசம்) மரு.கே.பி.இராஜன், இளைஞர் நல அலுவலர் திருமதி காவியா முத்துலட்சுமி, மாவட்ட காசநோய் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், தன்னார்வ மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Source: Read Full Article