தஞ்சாவூர்: தொடர் விடுமுறையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இதனால் கோவில் நுழைவாயில் முதல் பிரமாண்டமான கோவில் வளாகம் வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். மாமன்னன் ராஜராஜ சோழனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில், தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சின்னமாக விளங்கி வருகிறது. பிரமாண்டமான விமானம், அழகிய கோபுரங்கள், கலைநயம் மிக்க சிற்பங்கள் என கோவிலின் ஒவ்வொரு பகுதியும் தனிச்சிறப்பு கொண்டதாக உள்ளது.

இதனால் தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தினமும் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

மாலை நேரத்தில் அதிகரித்த வருகை

தற்போது தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தஞ்சாவூரில் காலை மற்றும் மதிய நேரங்களில் வெப்பம் அதிகமாக காணப்படும் நிலையில், மாலை நேரத்தில் வெப்பம் சற்று குறைவதால் பலரும் குடும்பத்துடன் பெரிய கோவிலை பார்வையிட வரத் தொடங்கினர்.

இதனால் மாலை நேரத்தில் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி காணப்பட்டது. கோவில் நுழைவாயில், கோபுரங்கள், பிரகாரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சிற்பக்கலையை ரசித்த சுற்றுலா பயணிகள்

பெரிய கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் கோவிலின் கட்டிடக்கலையை வியப்புடன் பார்த்து ரசித்தனர். கோவில் சுவர்களில் காணப்படும் நுணுக்கமான சிற்பங்கள், பிரமாண்டமான கற்சிற்பங்கள், கோபுரங்களின் கலைநயம் ஆகியவற்றை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

குடும்பத்துடன் வந்தவர்கள் கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இளைஞர்கள் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் கோவிலின் சிறப்புகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். பலரும் தங்களது செல்போன்களில் கோவிலின் பிரமாண்ட தோற்றத்தை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

இதற்கிடையே பெருவுடையார் சாமியை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பல மணி நேரம் காத்திருந்த பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர். தொடர் விடுமுறை காரணமாக ஒரே நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் திரண்டதால் கோவில் வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வரலாறு, ஆன்மிகம், கட்டிடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றை ஒருங்கிணைத்து கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரியகோவில், தொடர் விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மாலை நேரத்தில் திரண்ட மக்கள் கூட்டம், தஞ்சை பெரியகோவில் இன்றளவும் தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாக திகழ்வதை மீண்டும் வெளிப்படுத்தியது.

வெளி மாவட்ட, மாநில சுற்றுலாப்பயணிகள் வருகையால் தஞ்சாவூர் பெரிய கோவில் எதிரில் உள்ள பார்க்கிங் ஏரியாவில் கார்கள், பஸ்கள் என வரிசை நின்றன. அங்கு நிறுத்த இடம் இல்லாததால் பழைய கோர்ட் ரோடு, சிவகங்கை பூங்கா பகுதி என்று சாலையோரத்தில் ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. பக்தர்கள் வருகை அதிகம் இருந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பள்ளி விடுமுறை என்பதால் அதிகளவிலான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து குவிந்தனர்.

Source: Read Full Article