"செல்போன் சுவிட்ச் ஆப்ஃ - காவல் நிலையத்தில் புகார்"

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் ( வயது 26 ) இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்ற பிரேம்குமார் , இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள், கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் , பிரேம் குமாரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் , கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி இரவு உச்சிப்புளிதுத்தி வலசை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய காளிதாஸ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

"பணம் தருவதாக கூறி வரவழைப்பு"

அப்போது, பிரேம்குமார் கடன் வசூல் செய்ய வந்த போது தன்னைப் பற்றியும் தனது மகளைப் பற்றியும் தவறாகப் பேசியதாகக் காளிதாஸ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், பணம் தருவதாகக் கூறி கடந்த (அக்டோபர் 5) ஆம் தேதி மதியம் 2 மணியளவில் உச்சிப்புளி அருகே உள்ள தோப்புவலசை கடற்கரைக்கு பிரேம்குமாரை வரவழைத்துள்ளார். அங்கு பிரேம்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை எடுத்துக் கொண்டதாகவும் , பின்னர் உடலைக் கடற்கரை மணலில் புதைத்ததாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காளிதாஸ் உடல் புதைக்கப்பட்ட இடத்தை காண்பித்ததை தொடர்ந்து அங்கு தோண்டி உடலை மீட்டனர். பின்னர், உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பிரேம்குமாரின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்களும் நண்பர்களும் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

Source: Read Full Article