6 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. அதேசமயம் தேர்தலில் படுதோல்வியடைந்த அதிமுகவில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் சிலர் பெரும்பான்மை இல்லாத தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என தலைமையிடம் கோரிக்கை முன்வைத்தனர். இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க முயல்வதாகவும் தகவல் வெளியானது. சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சி கொறடா உத்தரவையும் மீறி தவெக அரசுக்கு ஆதரவு அளித்தனர்.

இந்த சூழலில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் தவெகவிலும் இணைந்தனர். இது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தையும் சபாநாயகர் உடனடியாக ஏற்றதும் சர்ச்சையை கிளப்பியது.

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு

இதற்கிடையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அதன்படி மனுவை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்பு செல்லும் எனவும் அதிரடியாக தீர்ப்பு வழங்கினர்.

அதேசமயம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பான மனு மீது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நடவடிக்கை எடுக்க 2 மாதங்கள் கால அவகாசம் கொடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தகுதி நீக்க வழக்கு நிலுவையில் இருப்பதால் ராஜினாமாவை ஏற்கக்கூடாது வாதிடப்பட்ட நிலையில் ராஜினாமாவுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இடைத்தேர்தலா?.. மேல்முறையீடா?

6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நிலையில் அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் மட்டும் இடைத்தேர்தல் நடந்து முடிந்து விட்டது. அதில் பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் மீண்டும் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இன்னும் 4 தொகுதி இடைத்தேர்தல் இருப்பதால் இந்த விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்யுமா அல்லது இடைத்தேர்தலை சந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேல்முறையீடு சென்றாலும் அதிமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு குறைவு தான் என சொல்லப்படுகிறது.

Source: Read Full Article