ஆடுகள் திருட்டு - சிசிடிவி கேமிரா காட்சிகள் ஆய்வு

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு ஊராட்சி மஞ்சள் போடு பகுதியை சேர்ந்தவர்கள் லோகு ( வயது 38 ), கணேஷ் ( வயது 30 ), பிரபு ( வயது 42 ), ஆண்டாள் ( வயது 75 ), மீரான் ( வயது 30 ), சுரேகா ( வயது 29). இவர்கள் உள்பட பலரது வீடுகளில் வளர்த்து வந்த ஆடுகள் கடந்த 2 மாதங்களாக திருடுபோய் வந்தது. இதுகுறித்து கானத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தனர்.

இதில், பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து ஆடுகளை திருடி செல்வதும், சாலையில் மேய்ச்சலுக்காக சுற்றி திரியும் ஆடுகளுக்கு உணவு கொடுப்பது போன்று காரில் இருந்தப்படியே வரவழைத்து கடத்தி சென்றதும் பதிவாகி இருந்தது.

"கறிக்கடை உரிமையாளரிடம் விற்பனை"

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கண்ணகி நகரை சேர்ந்த நாய் மணிகண்டன் ( வயது 32 ), கதிரவன் (வயது 22) ஆகியோரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

நாய் மணிகண்டன் , தடை செய்யப்பட்ட மாத்திரை விற்பனை செய்த வழக்கில் கடந்தாண்டு சிறை சென்றவர் என்பதும் கதிரவன் இருமுறை ஆடுகள் திருடிய வழக்கில் சிறை சென்றவர் , அடிதடி வழக்கு உள்ளது. இருவரும் பைக்கில் உலா வருவார்கள். ஆடுகள் எங்கெல்லாம் உள்ளது என நோட்டமிட்டு விட்டு சென்று விடுவார்கள். பின்னர், ஏற்கனவே பார்த்து விட்டு சென்ற இடங்களுக்கு காரில் வருவார்கள்.

பின்னர் ஆடுகள் சாப்பிடுவதற்கான உணவுகளை காரின் கதவை திறந்து விட்டு கொடுப்பார்கள். பின்னர் அப்படியே அலேக்காக காரில் தூக்கி போட்டு பறந்து விடுவார்கள். பின்னர் திருடிய ஆடுகளை கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தை சேர்ந்த கறிக்கடை உரிமையாளர் மோத்தி பாபு ( வயது 40 ) என்பவரிடம் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

"குறைந்த விலைக்கு விற்பனை"

இதையடுத்து, மோத்தி பாபுவையும் போலீசார் கைது செய்து கானத்தூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில் மோத்தி பாபு மீது ஆடு திருடிய வழக்கு கடந்த 2022 - ம் ஆண்டு வேதாரண்யம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

அவரிடம் மேலும் விசாரித்ததில், 'ஒரு கிலோ ஆட்டுக்கறி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் வெறும் ரூ.2 ஆயிரத்திற்கு ஆடுகளை நாய் மணிகண்டனும் , கதிரவனும் விற்பனை செய்கிறார்களே என எண்ணி விவரத்தை கேட்டுள்ளார். அப்போது தான் இருவரும் ஆடுகளை திருடி குறைந்த விலையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவருடன் சேர்ந்து ஆடுகளை திருடும் தொழிலில் மோத்தி பாபு ஈடுபட்டு வந்துள்ளார்.

இப்படி 3 பேரும் கூட்டு சேர்ந்து முட்டுக்காடு, கானத்தூர், பனையூர் போன்ற பகுதிகளில் இதுவரை சுமார் 25 - க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 15 ஆடுகள் மீட்கப்பட்டன. 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article