நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், விசைத்தறியில் ரஜினியின் உருவப்படத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் கரூர் நெசவாளியும் ரஜினி ரசிகரமான பிரபு.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்ற நெசவுத் தொழிலாளி, விசைத்தறியில் ரஜினிகாந்தின் உருவப்படத்தை நேர்த்தியாக நெய்து சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். பாரம்பரியமாக நெசவுத் தொழில் செய்து வரும் பிரபு, இந்த தொழிலை அடுத்தக்கட்ட தொழில்நுட்பத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பிப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

இரவு-பகல் பாராமல் உழைத்து

அதன் முதற்கட்டமாக, தனது மகள் வரைந்து கொடுத்த திருவள்ளுவர் படத்தை துணியில் அச்சிட்டு சாதனை படைத்தார். அதனைத் தொடர்ந்து, தான் தீவிரமாக நேசிக்கும் நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்தை விசைத்தறியில் உருவாக்க திட்டமிட்டார். இதற்காக, வரும் 15-ஆம் தேதி வெளியாகவுள்ள 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் ரஜினியின் படத்தை இணையதளத்திலிருந்து எடுத்து, சுமார் இரண்டு மாத காலம் இரவு-பகல் பாராமல் உழைத்து துணியில் உருவப்படமாக உருவாக்கியுள்ளார்.

இந்தச் சாதனைக் குறித்து பிரபு கூறுகையில், “இரண்டு மாத கடுமையான உழைப்பிற்குப் பிறகு இந்த சாதனை சாத்தியமானது. தற்போதைய தொழில் நுட்பத்தில், இது போன்ற உருவப்படம் கொண்ட துணிகளை ஒரு நாளைக்கு 5 வீதம் உற்பத்தி செய்ய முடியும். பொதுமக்கள் அல்லது ரசிகர்கள் தங்களது குடும்பப் புகைப்படங்களை வழங்கினாலும் அதைத் துணியில் நெய்து தரத் தயாராக உள்ளேன். பழமையான நெசவுத் தொழில் அழிந்துவிடாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே எனது முதன்மை நோக்கம்” என்றார்.

ரஜினியை சந்திக்க ஆசை

மேலும், “சொந்த முயற்சியில் உருவாக்கிய இந்தத் துணியை நடிகர் ரஜினிகாந்திடம் எனது குடும்பத்தினருடன் நேரில் சென்று வழங்கி வாழ்த்து பெற வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை. 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் இதனை காட்சிப் பொருளாக வைக்கவும் திட்டமிட்டுள்ளேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Source: Read Full Article