பிரதமர் மோடி மக்கள் சேவையாற்ற வந்து இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சராக 12.5 ஆண்டுகள்

சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டனாக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய நரேந்திர மோடி இன்றைக்கு இந்திய நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார். ரயில் நிலையத்தில் டீ விற்று வாழ்க்கை நடத்தி வந்த அவர் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது பலருக்கும் ரோல் மாடலாக அமைந்துள்ளது, தனது இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றிய நரேந்திர மோடி 1987ம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரது சிறந்த நிர்வாகத் திறமை மற்றும் கட்சியை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், தேர்தல் வியூகம் என ஓராண்டிலேயே குஜராத் மாநில பாஜக பொதுச் செயலாளராக உயர்ந்தார்.

1990களின் இறுதியில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற அவர், பல மாநிலங்களின் கட்சிப்பணிகளை பொறுப்புடன் கவனித்து வந்தார். இதனிடையே 2001ல் குஜராத்தில் கேஷுபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அந்த காலத்தில் அங்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டது. இதன் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த சில இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. இப்படியான நிலையில் கேஷுபாய் படேலின் தலைமை மீது பாஜகவுக்கு அதிருப்தி ஏற்பட, குஜராத்தில் நிலைமையை சமாளிக்க மோடியை முதலமைச்சராகப் பொறுப்பேற்க கட்சித் தலைமை கேட்டுக்கொண்டது.

அதுவரை நேரடியாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாத மோடி முதலமைச்சராக 2001ம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 7ம் தேதி பதவியேற்றார். 2002 பிப்ரவரியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பிறகு குஜராத் மாநிலத்தை தனது பாதையில் வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்றதாக 2002,2007,2012ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பெற்று சுமார் 12.5 ஆண்டுகள் குஜராத் மாநில முதலமைச்சராக பதவி வகித்தார்.

பிரதமராகவும் தொடர் வெற்றி

இப்படியான சூழலில் குஜராத்தில் சிறப்பாக ஆட்சி செய்ததால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் பாஜகவிடம் 2014 பிரதமர் வேட்பாளராக பிரதமர் மோடி பரிந்துரை செய்யப்பட்டார். 2014,2019,2024 என தொடர்ச்சியாக 3 முறை பிரதமராக வெற்றி பெற்று சாதனைப் படைத்தார். இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமராகத் தொடர்ந்து அதிக நாட்கள் பதவி வகித்தவர் என்ற சாதனையைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார். அவர் தலைமையிலான குஜராத் அரசும் சரி, மத்திய அரசும் சரி பல விஷயங்களை செய்து சர்ச்சையில் சிக்கினாலும், தன்னுடைய வலுவான திட்டங்கள் மூலம் மீண்டும் மீண்டும் ஆட்சி செய்து வருகிறார். மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.

Source: Read Full Article