Pondy Melange 2027: வெளிமாநில மக்களை ஈர்க்கும் தளமாக புதுச்சேரி இருக்கிறது என புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

”பாண்டி மெலாஞ்ச் 2027”

‘பாண்டி மெலாஞ்ச் 2027’ லோகோ அறிமுக விழா புதுச்சேரி காந்தி திடலில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் என். ரங்கசாமி நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை மற்றும் நிகழ்ச்சியின் அடையாள சின்னத்தை வெளியிட்டார். புதுச்சேரி சுற்றுலா துறையும் டெக் ஷாட் நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ நிகழ்வுகளுக்கான அறிமுக விழாவில் புதுச்சேரி சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ நிகழ்வுகளை அறிமுகப்படுத்தும் சிறப்புக் காணொளியை வெளியிட்டார். பண்பாடு, படைப்பாற்றல், கொண்டாட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ‘பாண்டி மெலாஞ்ச்’, கலை, இசை, ஆடை அலங்காரம், உணவு, நல்வாழ்வு, மரபு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

அறிமுக நிகழ்வின்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக, 2027 ஜனவரி மாதத்தில் கல்வி, ஆன்மிகம் மற்றும் மருத்துவ மாநாடுகளை நடத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கும் இந்த மாநாடுகளைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் இசை நிகழ்ச்சி, சர்வதேச நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன.

ரங்கசாமி பெருமிதம்:

லோகோவை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ”வெளி மாநில மக்களை ஈர்க்கும் பகுதியாக பாண்டிச்சேரி இருக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கு சென்றாலும் மக்கள் அதிகளவில் இருப்பதை காணலாம். இது தொடர்ந்து இருக்க வேண்டும். இதற்காக பல நிகழ்ச்சிகளை அரசு நடத்தி வருகிறது. சிறப்பு விருந் தினர்கள், கலைஞர்கள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தும்போது இங்கு வரும் சுற்றுலா பயணிகள், மக்களால் பெரிதும் வரவேற்கப்படும். அரசின் வருவாயை உயர்த் துகின்ற நிலையில் சுற்றுலாவை மேம்படுத்துவது மிக முக்கியம் கலை நிகழ்வுகள் மூலமாக பல மாநில மக்களும் வந்து செல்லும் வகையில் புதுச்சேரி மாநில மக்களின் சுற்றுலாவை வளர்க்கும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயரும்” எனத் தெரிவித்ததார்.

”பாண்டி மெலாஞ்ச் 2027” விழா விவரம்:

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக, சர்வதேச கலாச்சாரங்கள், பொழுதுபோக்கு, சிந்தனைத் தலைமைத்துவம் மற்றும் சமூகத் தாக்கம் ஆகியவற்றை ஒரே அசாதாரண தளத்தில் ஒன்றிணைக்கும் பிரம்மாண்டமான கலாச்சாரத் திருவிழாவாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. கலாச்சாரம், இசை, பொழுதுபோக்கு, ஃபேஷன், ஆன்மீகம், கல்வி, ஆரோக்கியம், வணிகம் மற்றும் சமூகத் தாக்கம் அனைத்தும் ஓரே இடத்தில் சங்கமிக்க உள்ளன. புதுச்சேரியில் வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 5ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை என, 3 நாட்களுக்கு 5 வெவ்வேறு இடங்களில் இந்த பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Source: Read Full Article