அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீராக தங்க மோதிரம் தரும் திட்டத்தை இன்று மதுரையில் கோலாகலமாக தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர் விஜய். மற்ற அரசு திட்டங்களை விட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறார் அவர். அதற்கு காரணம் இருக்கிறது.

முதல்வர் விஜயின் தங்கை வித்யா…

முதல்வர் விஜய்-க்கு ஒரு தங்கை இருந்தார். அவர் பெயர் வித்யா. வித்யா மீது அளவில்லாத பாசம் வைத்திருந்தார் விஜய். அவரை ஒரு கூடையில் உட்கார வைத்து தன் தலை மீது தூக்கி வைத்து கொண்டாடுவதுதான் விஜய்க்கு பிரியமான விளையாட்டாக சிறு வயதில் இருந்தது. அதற்கு காரணம், தன் தங்கை வித்யா எப்போதும் மகிழ்ச்சியோடு சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், விதி யாரைத்தான் விட்டது. விஜயின் மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் கெடு விதித்தது காலம். வித்யாவிற்கு ’லுக்கிமியா’ என்ற ஒரு வகை புற்று நோய் தாக்கியது. அதிர்ந்து போனார் விஜய். வித்யாவிற்கு எதுவும் ஆகக் கூடாது என்று அந்த சின்ன வயதில் விஜயின் பிஞ்சு மனது துடித்துக்கொண்டிருந்தது. ஆனால், நிலைமை கைம்மீறி போனது.

இறைவனடி சேர்ந்த முதல்வர் விஜயின் தங்கை

1984ஆம் ஆண்டு மே 20ஆம் நாள் வித்யா-வின் உடல்நிலை மோசமானது. அருகே இருந்து விஜய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்ணை மூடினார் வித்யா, அவரது உயிர் உடலை விட்டு பிரிந்தது. இதனை கண்டதும் , அன்று விஜய் அலறிய சத்தம் அவரது பெற்றோர்களையும் உறவினர்களையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தன் தங்கை இறந்ததை விஜயால் தாங்கவே முடியவில்லை. அன்றிலிருந்து விஜய் யாரிடமும் பெரிதாக பேசாமல், மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்ததாக விஜயின் தாய் ஷோபாவே கூறியிருக்கிறார்.

அளவிடமுடியாத பாசத்தால் உருவான தாய்மாமன் மோதிரம்

தனது தங்கை வித்யா மீது அளவிடமுடியாத பாசத்தை விஜய் வைத்திருந்ததால், அண்ணன் என்று யார் அழைத்தாலும் உருகிவிடும் ஆளாக இருந்திருக்கிறார் விஜய். வித்யா இன்று இருந்திருந்தால் அவருக்கு குழந்தை பிறந்து தாய் மாமனாக ஆகி, சீரும் சிறப்புமாக தன் தங்கை குழந்தைகளை வளர்த்திருப்பார் விஜய். ஆனால், அதற்கு காலம் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால்தான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் தங்கையாகவும், அக்காவாகவும் கருதி இந்த தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தானே உருவாக்கி, தேர்தல் அறிக்கையில் இடம்பெற வைத்தது மட்டுமின்றி, அதனை முதல்வரான பின்னர் இன்று செயல்பாட்டிற்கும் கொண்டு வந்திருக்கிறார் முதல்வர் விஜய்.

அன்று ஒரு தங்கை.. இன்று தமிழ்நாடு பூராவும் சகோதரிகள்

வித்யா என்ற ஒரு தங்கை விஜயை விட்டு பிரிந்திருக்கலாம். ஆனால், இன்று தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பெண்களை தன் சொந்த சகோதரிகளாக உரிமை ஆக்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.

Source: Read Full Article