தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது. தவெக ஆட்சி அமைந்தது முதலே அவர்களின் செயல்பாட்டின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோயில் நிலத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர்:

ஊழல் ஒழிப்பை தங்களது தேர்தல் வாக்குறுதியாக கொண்டு ஆட்சிக்கு வந்த தவெக அரசு கடந்த கால திமுக அமைச்சர்களின் மீதான புகார்கள் மீது தொடர் விசாரணையில் களமிறங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் எவ வேலு, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதே அதற்கு உதாரணம்.

இந்த நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 50 கோடி நிலம் ஆக்கிரமிப்பு வழக்கில் திமுக பிரமுகர் போலி ஆவணங்கள் மூலமாக ஆக்கிரமிப்பு செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கத் தயார்:

இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், பொதுமக்களின் புகாரை அடுத்துதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்களாக வேண்டுமென்று எடுக்கவில்லை. ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் குற்றச்சாட்டைத் தொடர்ந்துதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, ஆன்மீக அன்பர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான் நான் வைக்கிறேன். தமிழ்நாடு முழுக்க எந்தெந்த இடங்களில் திமுக-வினர் கோயில் சொத்துக்களை அபகரித்துள்ளனரோ, அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறையும், முதலமைச்சர் தலைமையிலான இந்த ஆட்சியும் நேர்மையாக செயல்படத் தயாராக இருக்கிறோம். பொதுமக்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன். தாராளமாக தைரியமாக கொண்டு வந்து கொடுங்கள். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நாங்கள் நடவடிக்கை எடுத்து காட்டுகிறோம். நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

புகார்கள் குவியுமா?

கடந்த கால திமுக ஆட்சியில் பல்வேறு துறைகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை பலரும் முன்வைத்து வந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை தவெக அரசு வேகப்படுத்தி வருகிறது. கடந்த கால அறநிலையத்துறையை சேகர்பாபு அமைச்சராக நிர்வகித்து வந்தார். கோயில் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு பல்லாண்டு காலமாக பல இடங்களில் இருந்து வருகிறது.

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுமக்கள் தாராளமாக புகார்கள் அளிக்கலாம், நடவடிக்கை எடுக்கிறோம் என்று அமைச்சரே வெளிப்படையாக என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பதால் ஏராளமான புகார்கள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article