தமிழ்நாட்டில் ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ரீல் விட்டு அதனை தொடரப் பார்ப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தவெக ஆட்சி முடிவுக்கு வரும்

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டு மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக தவெகவை ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்தார்கள். அக்கட்சி ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியிருக்கிறது. தங்களை எதிர்த்து பேசுகிறவர்களை கைது செய்வதை தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்று ரீல் விட்டு ஆட்சியைத் தொடரப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

கடந்த ஆட்சியாளர்களைப் பார்த்து எதெல்லாம் குறையாக சொன்னமோ, அவையெல்லாம் அளவுக்கதிகமாக எந்தவித கட்டுப்பாடுமின்றி நடைபெற்று வருகிறது. ஊழல் இல்லை, லஞ்சம் இல்லை என சொல்கிறார்கள். எல்லாம் ஒருநாள் பிடிபடும். உறுதியாக தவெக ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள் என கூறினார்.

ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வரும்

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவில் என்னை இணைப்பது பற்றி பேசுகிறார்கள். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக தலைமையில் ஒரே அணியில் தான் இருக்கிறோம். நான் ஏற்கனவே அவர்களுடன் தான் இருக்கிறேன். அமமுகவும், அதிமுகவும் ஜெயலலிதாவின் கட்சியாகும். அவரின் தொண்டர்கள் தான் கட்சியை வழிநடத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு அமமுக உறுதியாக இணைந்து செயல்படும்” என கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு இதுதேவை தான்

பிரதமர் வேட்பாளர் விஜய் என சொல்லப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, தமிழ்நாட்டு மக்கள் 108 தொகுதிகள் தான் தவெகவுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். 126 தொகுதிகள் எதிர்க்கட்சிகளுக்கு தான் வாய்ப்புக் கொடுத்தார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பதவிக்காக தான் அங்கு சென்றார்கள். மாணிக்கம் தாகூர் திமுக மேல உள்ள கோபத்தில் என்னென்னவோ சொல்கிறார்கள். அமைச்சர்கள் 2 பேர் ராஜினாமா செய்வதாக சொல்லும் அளவுக்கு தான் தவெக ஆட்சி உள்ளது. இந்த விஷயத்தில் முதலமைச்சர் விஜய் அமைதியாக உள்ளார்.

மண்குதிரையான தவெகவை நம்பி இறங்கிய காங்கிரஸ் இன்றைக்கு ஒன்றும் செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறது. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக வரவிடக்கூடாது என்ற அளவுக்கு தவெக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றால், வலிய சென்று ஆதரவு கொடுத்த மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி தான் பதில் சொல்ல வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article