அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் முடிந்தவுடன், ஈரானுடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார். ஈரான் பலவீனமடைந்துள்ளதாகவும், ஆனால் அமெரிக்கத் தேர்தல்கள் நடைபெறுவதற்காக காத்திருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாகவும் ட்ரம்ப் ஒரு குறிப்பிடத்தக்க கூற்றை முன்வைத்தார்.

ட்ரம்ப் கூறியது என்ன.?

அது குறித்து பேசிய ட்ரம்ப், "அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் முடிந்த உடனேயே ஈரான் போர் முடிவுக்கு வரும். சாதகமற்ற சூழ்நிலைகளையும் மீறி ஈரான் தொடர்ந்து போரிட்டு வருகிறது. மேலும், அது கடுமையான சிக்கலில் உள்ளது. ஈரான் இப்போது அமெரிக்காவில் ஒரு அரசியல் மாற்றத்திற்காக காத்திருக்கிறது. ஈரானிடம் இன்னும் சில ஏவுகணைகளை செலுத்தும் திறன் உள்ளது. அது பலவீனப்படுத்தப்பட்டுள்ளது," என்று கூறினார்.

ஹார்முஸ் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது – அமெரிக்க அதிபர்

அதோடு, "ஈரானிய ஆட்சி மனநிலை பிறழ்ந்தது. அதன் அணுசக்தித் திறன்களை நாம் அழிக்காமல் இருந்திருந்தால், அது அணு ஆயுதங்களை பயன்படுத்தியிருக்கும். ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதை தடுப்பதற்காக, நான் பி-2 குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தினேன். மேலும், அவர்களுடனான அணுசக்தி ஒப்பந்தத்தையும் ரத்து செய்தேன். இப்போது ஹார்முஸ் ஜலசந்தி நம் கட்டுப்பாட்டில் உள்ளது." என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும், "நாம் நமது இயல்பான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும்போது, திடீரென்று ஈரான் ஒரு அணு ஆயுதத்தைப் பெற்றால், அவர்கள் அதை பயன்படுத்துவார்கள். அவர்கள் பைத்தியக்காரர்கள். அவர்கள் பைத்தியக்காரர்கள், ஆனாலும் அதை பயன்படுத்துவார்கள்," என்று அவர் கூறினார்.

ஈரானில் பணவீக்கம் அதிகரித்துள்ளது: ட்ரம்ப்

தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானில் பணவீக்கம் 300 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், ராணுவத்தினருக்கு சம்பளம் கூட வழங்கப்படவில்லை என்றும் கூறினார். மேலும், "ஈரான் ஒரு பெரும் நெருக்கடியில் உள்ளது. அவர்கள் பெருமளவில் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது அவர்களால் ஏவுகணைகளை தயாரிப்பது கடினமாக உள்ளது. மேலும், அவர்களின் பெரும்பாலான உபகரணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன" என்றும் அவர் கூறினார். ஈரானுக்கு எதிரான போர் குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

Source: Read Full Article