TN New Secretariat: முதலமைச்சர் விஜய் அறிவித்த தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலக கட்டிடம், 25 ஏக்கர் பரப்பளவில் 15 மாடிகளை கொண்டிருக்குமாம்.

புதிய தலைமை செயலகம் - எங்கே அமையும்?

இடநெருக்கடி மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு, சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசுக்கு புதிய சட்டமன்ற வளாகம் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அண்மையில் அறிவித்து இருந்தார். இந்நிலையில் வெளியாகியுள்ள தகவலின்படி, புதிய தலைமை செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமையவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். 25.16 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடத்திற்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் ஆரம்பகட்ட ஒப்புதல்களை வழங்கியுள்ளனவாம். இதையடுத்து திட்டத்திற்கான கொள்கை ரீதியான அனுமதி அளித்து விரைந்து உத்தரவை பிறப்பிக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு வேகம் காட்டுகிறதாம்.

15 மாடிகள்.. ரூ.3,247 கோடி செலவு..!

சாந்தோம் பிரதான சாலையிலிருந்து அணுகலை கொண்டுள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இந்த நிலத்தில் ஒரு சதுர அடியின் மதிப்பு 22 ஆயிரம் ரூபாயாகும். அதன்படி, இந்த நிலத்தின் உத்தேச மதிப்பு மட்டுமே சுமார் 2 ஆயிரத்து 47 கோடி ரூபாயாக உள்ளது. கட்டுமான செலவிற்கே ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 3 ஆயிரத்து 247 கோடி ரூபாயாக மதிப்பிடப்படுகிறது. புதிய தலைமை செயலகத்திற்கான பிரதான கட்டிடமானது 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 15 மாடிகளை கொண்டதாக இருக்குமாம்.

தலைமை செயலகத்திற்கான அமைவிடம் எப்படி?

புதிய தலைமை செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் உள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதி, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் நந்தம்பாக்கத்தில் ஃபிண்டெக் சிட்டிக்கு எதிரே உள்ள ஒரு இடம் ஆகிய மூன்று தளங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இந்நிலையில் நகரின் மையப்பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்களை எளிதாக அணுகும் வகையில் 25 ஏக்கர் நிலம் கிடைப்பதால் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை தொடர்ந்து மயிலாப்பூர் எல்லைக்கு உட்பட்ட 21.37 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த, பொதுத்துறைக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஆரம்பகட்ட அனுமதியை வழங்கியுள்ளது. இந்த நிலம் 4593/1 (0.55 ஏக்கர்). 4593/29 (0.15 ஏக்கர்) மற்றும் 4593/33 (20.67 ஏக்கர்) ஆகிய மூன்று சர்வே எண்களைக் கொண்டுள்ளது. இந்த நிலப்பகுதிகள் 1958-ஆம் ஆண்டில் வீட்டுவசதித் திட்டங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக பொதுத்துறைக்கு 0.93 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான கடிதத்தின்படி, சர்வே எண் 4593/2 இன் கீழ் வரும் இந்த நிலம், சாலைப் பயன்பாட்டிற்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் கீழ் உள்ள சில கூடுதல் நிலங்களையும் சேர்த்தால், இந்த திட்டம் ஒட்டுமொத்தமாக 26.5 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: CM Vijay: புதிய ஆட்சியின் தலைவர் Vs பழைய ஆட்சியின் வாரிசு - பஞ்ச் மட்டுமா? தரவுகளும் வருமா? விஜய் இன்று பதிலுரை

மாற்று இடம் வழங்கக் கோரிக்கை

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் 1963 மற்றும் 1968-க்கு இடையில், 1,112 அரசு ஊழியர் குடியிருப்புகளும் 96 தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளும் கட்டப்பட்டன. 1986-ல் மேலும் 60 குடியிருப்புகளும், 1998-ல் 112 குடியிருப்புகளும் கட்டப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 1,380 ஆக உயர்ந்தது. இவற்றில், 1,284 குடியிருப்புகள் சிதிலமடைந்திருந்தன. கட்டிடங்கள் இடிக்கப்பட்டதிலிருந்து, அந்த இடம் காலியாகவே உள்ளது. இதுபோக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமும், தனக்குச் சொந்தமான 96 குடியிருப்புகளை இடிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மறுபுறம், அரசு விதிகளின்படி நிலத்தின் மதிப்பை மதிப்பிட்டு, அதற்கான தொகையை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கூறியுள்ளது நில மாற்றத்திற்கு ஈடுசெய்யும் வகையில் மாற்று நிலம் கிடைத்தால், அதனை வழங்குவதைப் பரிசீலிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாம்.

Source: Read Full Article