TN Govt Arasakumar Case: தவெக ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் ஆன பிறகும் நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் திமுக ஆதரவாளர்கள் இன்றளவும் அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது.

அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து:

தனியார் பள்ளிகளுக்கு அனுமதிகள் பெற்றுத்தருவதாக கூறி, நூறு கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகி பி.டி.அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான எதிர்தரப்பின் மனுவின் மீது அரசின் தாமதமான நடவடிக்கையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதேநேரம், தவெக ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் ஆன பிறகும் நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் திமுக ஆதரவாளர்கள் இன்றளவும் அரசுக்கு எதிராக செயல்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

ரூ.100 கோடி வரை மோசடி?

கடந்த திமுக ஆட்சியின் போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து நூறு கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அரசகுமார், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை காவல் ஆணையர், ஜூலை 11 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

குண்டாஸிற்கு எதிராக வழக்கு:

அரசகுமார் மீதான உத்தரவை ரத்து செய்யக் கோரி, அவரது மனைவி கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அது நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞரருமான பி.வில்சன் ஆஜராகி, 2024-25 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு, 2026 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, குண்டர் சட்டத்தில் அரசகுமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

குண்டாஸ் ரத்து ஏன்?

தொடர்ந்து, வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை எனவும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் குறிப்பிடட்டதோடு, குண்டர் சட்டத்தை எதிர்த்த மனு 13 நாட்கள் காலதாமதமாக பரிசீலிக்கப்பட்டது எனவும் குற்றம்சாட்டினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசகுமார் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். தடுப்புக்காவலை ரத்து செய்யக் கோரி அரசகுமார் ஜூலை 23, 2026 அன்று அளித்த மனுவை பரிசீலிப்பதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, நீதிபதிகள் மனுதாரருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர். தனிநபர் சுதந்திரத்திற்கு இதுபோன்ற மனுக்களை உரிய நேரத்தில் பரிசீலிப்பது அவசியம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், வேறு எந்த வழக்கிலும் தடுப்பு காவலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டால், அரசகுமாரை உடனடியாக விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Thirukkural Express: 2,917KM - குமரி டூ டெல்லி, பட்ஜெட்டில் தமிழகத்தையே இணைக்கும் திருக்குறள் விரைவு ரயில் பற்றி தெரியுமா?

மனுவை பரிசீலிக்க கால வரம்பு உள்ளதா?

குண்டாஸ் தடுப்புக் காவலுக்கு எதிரான ஒருவரின் மனுவை, அரசு பரிசீலிக்க குறிப்பிட்ட கால வரம்பு ஏதும் இல்லை. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் Article 22(5) கீழ், அந்த மனுவை தேவையற்ற தாமதமின்றி, மிக விரைவாக பரிசீலித்து முடிவு செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. தாமதத்திற்கு போதுமான காரணம் இல்லாவிட்டால் நீதிமன்றங்கள் பெரும்பாலான நேரங்களில் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடுகிறது. அந்த வகையில் தான் தற்போது அரசு குமார் மீதான குண்டாஸ் நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடரும் உள்ளடி வேலைகள்:

தவெக ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் ஆன பிறகும் நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் திமுக ஆதரவாளர்கள் இன்றளவும் அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 5 தசாப்தங்களாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஆண்டு வந்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கான ஆதரவாளர்களும், பார் கவுன்சில் தொடங்கி அரசின் பல்வேறு துறைகளில் பரவி கிடக்கின்றனர். தவெக அரசு இப்போது தான் மெல்ல மெல்ல தங்களுக்கு ஏற்ப அரசமைப்பை கட்டமைத்து வருகிறது. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் ஆதரவு மனநிலையை கொண்ட அதிகாரிகள் தற்போது வரை தவெக அரசுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்காமல் தொடர்கின்றனராம். அதனாலேயே உதயநிதி கைது தொடர்ந்து அரசகுமார் மீதான குண்டாஸ் வரையிலான அரசின் பல நடவடிக்கைகள் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லையாம். அந்த வகையில் அரசகுமாரின் மனு மீதான நடவடிக்கையை தாமதப்படுத்தியது யார்? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

Source: Read Full Article