Tamil Nadu By Election 2026: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றபோதும் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு எதிர்கொண்ட இடர்கள் அனைவரும் அறிந்தது.

இடைத்தேர்தல்:

இதையடுத்து, அதிமுக-வைச் சேர்ந்த 6 எம்எல்ஏ-க்கள் யாரும் எதிர்பாராத வகையில் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தனர். இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்று எதிர்பார்த்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தவிர எஞ்சிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் தமிழ்நாடு பரபரப்பாகியுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் தற்போது முதல் அமலுக்கும் வந்துள்ளது. கடந்த தேர்தலிலும் தவெக- திமுக இடையே பலத்த போட்டி ஏற்பட்டு வந்த நிலையில், சட்டமன்றத்திலும் திமுக - தவெக இடையேதான் மோதல் நிலவி வருகிறது.

அதிமுக வசம் இருந்த தொகுதிகள்:

தங்களிடம் இருந்து பறிகொடுத்த இரண்டு தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதிமுக இந்த இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆளுங்கட்சியான தவெக இந்த தேர்தலில் போட்டியிடுவது என்பது உறுதி என்ற நிலையில், எதிர்க்கட்சியான திமுக தனது பலத்தை காட்ட களமிறங்கும். ஆனால், பெரியளவு பேசுபொருளாக இல்லாமல் இருக்கும் அதிமுக இந்த இடைத்தேர்தலில் களமிறங்குமா? இல்லையா? என்பதே கேள்வியாக இருந்து வருகிறது.

அதேசமயம், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வீட்டில் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளான தாராபுரம், அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளர்களை அழைத்து பேசியுள்ளார்.

வேட்பாளர் தேர்வில் தீவிரம்:

அப்போது, இடைத்தேர்தல் குறித்தும் மாவட்டச் செயலாளர்களிடம் தீவிரமாக விவாதித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆலோசித்த அடுத்த நாளே இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை அதிமுக-வில் உள்ள தனது எதிர்ப்பாளர்களுக்கும், மற்ற கட்சியினருக்கும் காட்ட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் பலமிகுந்த தொகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கான வேட்பாளரை களமிறக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களையும் அரவணைத்துச் செல்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி:

திமுக மட்டுமே அதிமுக-வின் வலுவான போட்டியாக இருந்து வந்த நிலையில், இந்த முறை ஆளுங்கட்சியாக தவெக மிகப்பெரிய போட்டியாளராக இந்த தேர்தலில் அதிமுக-விற்கு எதிராக உள்ளது. தங்கள் கைவசம் இருந்த தொகுதி என்பதால் இந்த தொகுதியில் எப்படியேனும் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியும் அதிமுக-விற்கு உள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்? அதிமுக இடைத்தேர்தலில் தனது பலத்தை காட்டுமா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் விடை கிடைக்கும்.

Source: Read Full Article