தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை உள்ளதால், தற்போது 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9-ல் தொடங்கும் வேட்புமனு தாக்கல்

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி,

செப்டம்பர் 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொங்குகிறது.

செப்டம்பர் 16-ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு.

செப்டம்பர் 17-ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை.

செப்டம்பர் 19-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்.

அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

காலியாக இருந்த 7 சட்டமன்ற தொகுதிகள் - 2 தொகுதிகளுக்கு மட்டும் தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, தற்போது கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. திமுக பக்கம் இருந்த கட்சிகள், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த நிலையில், அதிமுகவிலும் சலசலப்பு ஏற்பட்டு, ஒரு கோஷ்டியினர் தவெக பக்கமாக வருவதற்கு தயாராக இருந்தனர். இந்நிலையில், அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 6 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர்.

இதனால், முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும், மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால், இடைத்தேர்தலுக்கான தேதிக்காக அனைத்து கட்சியினருமே காத்திருந்த நிலையில், தற்போது, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் மீது தேர்தல் தொடர்பான வழக்கு நடைபெற்றுவருவதால், தற்போது அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது.

கட்டாயத்தில் தவெக - வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்

இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. அதே நேரத்தில், ஏற்கனவே இந்த ஆட்சி எப்போது கவிழும் என்று எதிர்பார்த்திருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இந்த இடைத்தேர்தல் முக்கியமானதாக கருதப்படுகிறது.

தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்னரே, திமுக-அதிமுக இணைந்து ஆட்சியை கைப்பற்ற திட்டம் போட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் அவர்கள் என்ன வியூகம் வகுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே அந்த தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், தற்போது திமுக டம்மி வேட்பாளர்களை களமிறக்கி அதிமுகவிற்கு உதவுமா அல்லது வேறு மாதிரியான வியூகத்தை வகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால், எப்படி பார்த்தாலும், எல்லா கட்சிகளுக்குமே இந்த இடைத்தேர்தல் கடும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. இதில் மக்கள் முடிவு என்ன.? வெற்றி யார் பக்கம்.? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Source: Read Full Article