சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெக தலைமையில் விஜய் ஆட்சியமைக்க முடியாமல் தவித்தபோது அவருக்கு இந்திய காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. இதில் திருமாவளவனின் ஆதரவு மிகப்பெரிய பங்கு வகித்தது.,

திமுக-வை விளாசிய திருமா:

இந்த சூழலில், தேர்தலுக்கு பிறகு திருமாவளவன் தவெக கூட்டணியில் இடம்பெறுகிறோம் என்பதை அறிவிக்க 3 மாத காலம் எடுத்துக்கொண்டார். அதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர் திமுக-விற்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள் கொந்தளிப்பை உண்டாக்கியது. பின்னர், பாமக-வுடன் இணக்கம் காட்ட தவெக தொடங்கியதால் தவெக கூட்டணியை உறுதிபட அறிவித்தார்.

இந்த சூழலில், இன்று திருமாவளவன் திமுக-வை மிக கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சமீபத்தில் சட்டமன்றத்தில் விஜய்யின் பேச்சு குறித்து அவருக்கு அறிவுரை கூறியிருந்த திருமாவளவன், விஜய் தனது உடல்மொழியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

இடைத்தேர்தல்:

இந்த நிலையில், இன்று திமுக-வை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். திருமாவின் இந்த காரசாரமான விமர்சனத்திற்கு சில அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 6ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

காரணம் என்ன?

ஆளுங்கட்சியாக முதன்முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் தவெக இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வேட்கையுடன் களமிறங்கியுள்ளது. மதுராந்தகம் தொகுதி தனித்தொகுதி என்றாலும் அந்த தொகுதியில் வன்னிய சமுதாயத்தின் வாக்குகள் மிக அதிகளவு உள்ளது. வன்னிய சமுதாயத்தின் வாக்குகளை கவர ஆளுங்கட்சியான தவெக பாமக -விடம் ஆதரவு கோரியுள்ளது.

இது விசிக-வினர் மத்தியில் சற்று கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. விசிக-விற்கு முதன்முறை ஆட்சிக்கட்டிலில் பங்களித்தது தவெக. ஆனால், அவர்கள் பாமக-வுடன் நெருக்கம் அதிகம் காட்டினால் அது விசிக ஆட்சியில் இடம்பெறுவதை கேள்விக்குறியாக்கும் என்றே அக்கட்சியின் தொண்டர்கள் வேதனையில் உள்ளனர். பாமக வசம் 4 எம்எல்ஏ-க்கள் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். பாமக-வும் ஆட்சியில் இடம்பிடிக்க மிகுந்த ஆர்வத்துடனே இருந்து வருகின்றனர்.

இதனால், தவெக கூட்டணியில் விசிக எந்த தடையும் இல்லாமல் உறுதியாக இடம்பிடிக்க வேண்டும் என்ற எதிரொலியாகவே இன்று திருமாவளவன் திமுக-வை மிக கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

தவெக ஆட்சியில் பங்களித்து கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்தாலும் பிரதமர் வேட்பாளர், அரசின் முடிவுகள், செயல்பாடுகள் உள்ளிட்ட பல காரணங்களால் கூட்டணிக்குள் ஒரு வித பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கூட்டணியில் இதுவரை இணையவே இல்லை. திமுக ஆட்சியில் பங்களிக்காதபோதும் கூட்டணி கட்சிகளாக இருந்தபோது திமுக-வின் முடிவுக்கு கட்டுப்பட்டு வந்தது. ஆனால், தவெக-வின் முடிவுகளுக்கு தற்போதைய கூட்டணி கட்சிகள் முழு மனதாக ஒத்துழைப்பதில் பல்வேறு முரண்பாடுகளும் நிலவி வருகிறது.

Source: Read Full Article