BCCI On Rohit Sharma: பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவின் கருத்தால் ரோகித் சர்மா 2027ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதி என கூறப்படுகிறது.

ரோகித் சர்மா எப்படி?

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா தொடர்ந்து இடம்பெறுவாரா என அதிகரித்து வரும் சந்தேகத்தை, முடித்து வைக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசுகையில் உயர்மட்ட அளவில் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அணியில் அவரது இடம் தொடர்பாக ஏன் அநாவசியமான விவாதங்களை மேற்கொள்கிறீர்கள் என விளக்கமளித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற பிசிசிஐ அமைப்பின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பேசிய அவர், 2027ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா தொடர்வாரா என்ற கேள்விக்கு அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

உங்களுக்கு என்ன தான் வேண்டும்?

செய்தியாளர்கள் சந்திப்பில் சைகியா பேசுகையில், “கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் ரோகித் சிறப்பாக விளையாடி வருகிறார். அப்படி இருக்கையில் இதைவிட வேறு என்ன தான் வேண்டும்? விளையாடிய கடைசி போட்டியிலும் 138 ரன்களை விளாசினார். எனவே தேவையற்ற யூகங்களுக்கு எல்லாம் நான் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை” என பதிலளித்துள்ளார். 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக இளம் வீரரை தேர்வு செய்ய தேர்வுக்குழு தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில், பிசிசிஐ செயலாளரின் இந்த கருத்து வெளிப்பட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

சதம் வாயிலாக பதிலளித்த ரோகித் சர்மா:

கடந்த ஜுலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 3 போட்டிகள்கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என இழந்தது. அதில் முதல் இரண்டு போட்டிகளில் முறையே 11 மற்றும் 26 ரன்களை மட்டுமே ரோகித் சர்மா குவித்தார். இதனால் இந்திய அணியின் நலனை கருத்தில் கொண்டு, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் தொடரின் கடைசி ஒருநாள் போட்டியுடன் ரோகித் சர்மா சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என பல்வேறு தகவல்கள் பரவின. ஆனால் அதுதொடர்பாக எந்தவித கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருந்த ரோகித், தனது பேட்டால் ஒட்டுமொத்த விமர்சனங்களையும், வதந்திகளையும் உடைத்து எறிந்தார். 2027ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவதில் மிகவும் தீவிரமாக இருப்பதையும் மீண்டும் உணர்த்தினார்.

இதையும் படியுங்கள்: Isros GSLV-F17: நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?

லார்ட்ஸ் மைதானத்தில் ரோகித் சம்பவம்:

அதன்படி, லார்ட்ஸில் நடைபெற்ற தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் 138 ரன்களை குவித்ததோடு, இந்த வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் அதிக வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அந்த இன்னிங்ஸ் ஆனது ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து ஏன்? தேவையற்ற வதந்திகள் பரவ வேண்டும், 2027ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு இந்த அனுபவம் வாய்ந்த வீரர் அணியில் இருப்பது அவசியம் என்பதை விமர்சகர்களுக்கு வலியுறுத்தியது. இதுதொடர்பாக பின்பு பேசிய ரோகித் சர்மா, தொடர்ச்சியாக பரவி வரும் வதந்திகள் ஒருபோதும் என்னை பாதித்ததில்லை என குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடங்கும்போது, ரோகித் சர்மா 40 வயதை எட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article