ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள்

ராமேஸ்வரம் முக்கியமான ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் பல கோடி பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக ராமநாதசுவாமி கோவில், அக்னி தீர்த்தம், தனுஷ்கோடி, பாம்பன் பாலம், முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்ப்பதற்காகவே மக்கள் குவிவார்கள். அந்த வகையில் பாம்பன் பாலத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்வதிற்குள் செல்ல ஒரே ஒரு வழித்தடம் மட்டுமே உள்ளதால் தினந்தோறும் வாகன நெரிசலில் சிக்கி திணறி வருகிறது.

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ராமேஸ்வரம்

இதனையடுத்து ராமேஸ்வரத்திற்குள் செல்ல மாற்று வழியை தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய மாற்று சுற்றுச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்காக, தனியார் நிலங்கள் உட்பட பல பகுதிகளில் 100 அடி அகலத்தில் (சுமார் 30.5 மீட்டர்) நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கப்படுகிறது. ராமேஸ்வரம் தீவின் நுழைவாயிலில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடம் அமைந்துள்ள பேய்க்கரும்பு அருகே தொடங்கி, அரியாங்குண்டு, மெய்யம்புளி, பர்வதம், ஓலைக்குடா வழியாக சங்குமால் கடற்கரை வரை இந்தச் சாலை அமைகிறது.

100 அடி அகலத்தில் மாற்று சாலை

இந்த மாற்றுச்சாலையின் மொத்த நீளம் 6.25 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ளது. வாகனப் போக்குவரத்து தடையின்றிச் செல்லும் வகையில் 100 அடி அகலத்தில் இந்தச் சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் மற்றும் விடுமுறை நாட்களில் ராமேஸ்வரம் நகருக்குள் வரும் சுற்றுலா வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து ஸ்தம்பிப்பை இது முற்றிலும் தவிர்க்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

எந்த எந்த வழித்தடத்தில் மாற்று சாலை.?

குறிப்பாக தனுஷ்கோடி மற்றும் அக்னி தீர்த்தக் கடற்கரைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், ராமேஸ்வரத்திற்குள் நுழையாமல் இந்த வெளிவட்டச் சாலை வழியாக நேரடியாகச் செல்ல முடியும். இந்த பணிகளில் முக்கிய கட்டமான நிலம் கையகப்படுத்தும் பணிகள் மற்றும் இழப்பீடு வழங்கும் நடைமுறைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த புதிய சாலை பயன்பாட்டிற்கு வரும்போது ராமேஸ்வரம் தீவின் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article