தொடரும் மின் வெட்டு- தமிழக அரசு புதிய திட்டம்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீட்டில் அதிகளவு ஏசி மற்றும் மின் விசிறி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் மின் தேவையின் காரணமாக மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், இதனையடுத்து மின் வெட்டு இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் தமிழக அரசு 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்து சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்த ஆண்டு கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்ததன் காரணமாக, மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சில நேரங்களில் மின்னழுத்தக் குறைபாடு போன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன.

2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போது மின் தொகுப்பின் (Grid) நிலைமை சீராகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது. மேலும், மின் கட்டமைப்பு மாறுபாடுகள் மற்றும் மின் விநியோக நிலைமையை தொடர்ந்து மின்வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் உரிய உத்தரவுகள் வழங்கி வருகிறது.

மின்விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது. மின்தடை ஏற்படும் நிகழ்வுகளை எந்தவித அலட்சியமும் இன்றி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என களப்பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்கவும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் சீரான மின்சாரம்

பொதுமக்களுக்கு நாள் முழுவதும், குறிப்பாக இரவு நேரங்களிலும், சீரான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும், மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் இயங்கும் நுகர்வோர் சேவை மையமான 'மின்னகம்' தை "94987 94987" என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article