தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மொத்த நாட்டையுமே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலின் அடிப்படையில் தான் சந்தித்த முதல் தேர்தலிலே 35 சதவீத வாக்குகள் பெற்று விஜய் ஆட்சியைப் பிடித்தார்.

பிரதமர் ஆசையில் விஜய்:

தனித்து களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சர் விஜய் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வருகிறார். இந்த சூழலில், சமீபகாலமாக தவெக-வினரும், விஜய் ரசிகர்களும் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து வருகின்றனர்.

விஜய் பிரதமர் வேட்பாளராக முன் நிற்பதில் என்னென்ன சவால்கள்? உள்ளது என்பதை கீழே காணலாம்.

1. பெயர்:

விஜய்யின் அடையாளமாக பட்டிதொட்டியெங்கும் தமிழ்நாட்டில் இருப்பது அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம். தமிழக என்பது தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பிரதிபலிக்கும் ஒரு சொல் ஆகும். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை தமிழ்நாட்டு மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இதே பெயரில் தேசிய அரசியலில் பிரதமர் வேட்பாளராக அவர் நிற்பதில் மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்பு அளிக்காது என்பதே நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் அங்கே வசிக்கும் சிலர் தமிழர்கள் மீது எந்தளவு எதிர்ப்பு மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை பல நிகழ்வுகள் மூலம் நாம் அறிந்திருப்போம். அப்படி இருக்கும் சூழலில், தமிழரை பிரதமர் வேட்பாளராக ஏற்பதில் பிற மாநிலங்கள் மிகப்பெரிய தயக்கம் காட்டும். ஒரு வேளை தேசிய அரசியலுக்காக அவர் தவெக என்ற பெயரை மாற்றினால் தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர்ராவிற்கு ஏற்பட்ட கதி ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.

2. 40 தொகுதிகள் போதுமா?

தவெக கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் போட்டியிட்டது. இந்த இரண்டு மாநிலங்களிலும் மொத்தம் 40 தொகுதிகள் மட்டுமே உள்ளது. 40 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றாலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை அமைப்பது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தவெக வசம் இருக்கும் 40 தொகுதிகளே அதிகாரமிக்க சக்தியாக மாறினால் மட்டுமே விஜய்யால் பிரதமர் பதவியையும் உரிமை கோர முடியும்.

3. வில்லனாக நிற்கும் காங்கிரஸ்:

2014ம் ஆண்டு முதல் ஆட்சியை இழந்து தவிக்கும் காங்கிரஸ் தொடர்ந்து 3 முறை ஆட்சியை பாஜக-விடம் இழந்து தவித்து வருகிறது. எப்படியேனும் மோடி ஆட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் துடித்து வருகிறது. அதற்கு விஜய்யின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ளவே ராகுல் காந்தியும், அவரது ஆதரவாளர்களும் காய் நகர்த்தி வருகின்றனர். அவர்கள் விஜய்யின் செல்வாக்கு வட இந்தியாவில் உயர்ந்து வந்தாலும் அதற்காக அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த சுத்தமாக விருப்பம் காட்டாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. கடந்த காலங்களில் மம்தா பானர்ஜி, அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரை அவர்கள் ஏற்காததும் அதற்கு ஓர் உதாரணம்.

4. கூட்டணி கட்சிகளை ஒத்துழைக்க வைப்பது:

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கடந்த இரு மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு பிரதான காரணம் பாஜக மட்டுமின்றி, இவர்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில் ஒருமித்த கருத்து இல்லாததே ஆகும். கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்த திரிணாமுல், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ராகுல் காந்தியை பிரதமராக முழுமையாக ஏற்காததும் அவர்கள் கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணம். விஜய்க்கும் அது ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

5. வட இந்தியாவின் ஆதிக்கம்:

இந்தியாவின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் நாட்டை ஆள்வதில் வட இந்தியர்களின் ஆதிக்கமே இருந்து வருகிறது. அதற்கு நாட்டின் பிரதமர்கள் பட்டியலை பார்த்தாலே நாம் உணரலாம். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம், தெலங்கானா என தென்னிந்திய மாநிலங்களைக் காட்டிலும் வட இந்தியாவின் கீழ் 20 மாநிலங்களுக்கும் குறையாமல் உள்ளன. வட இந்திய மாநிலங்களில் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. அவர்களில் ராகுல் காந்தி போல பிரதமர் பதவியை குறிவைத்து பலரும் உள்ளனர். அந்த மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு மனநிலையை கொண்ட கட்சிகள், தலைவர்கள், பிரதமர் பதவியை குறிவைப்பவர்களை விஜய்யை ஏற்றுக்கொள்ள வைப்பதில் தவெக-விற்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கும்.

6.மத அரசியல்:

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் விஜய்யை ஒரு கிறிஸ்தவராக மத அடையாளத்திற்குள் அவரை சுருக்கவில்லை. ஆனால், தேசிய அரசியலைப் பொறுத்தமட்டில் மதம் என்பது மிகப்பெரிய அளவில் கோலோச்சி வருகிறது. அது பாஜக-வாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி. கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, சோனியா காந்தி பிரதமர் ஆவார் என்று அறிவிக்கப்பட்டபோது அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஏற்க மறுத்து, அவருக்கு பதிலாக மன்மோகன்சிங் பிரதமராக பொறுப்பேற்றார். வட இந்தியாவைப் பொறுத்தமட்டில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அதை அவர்கள் ஏற்பார்களா? என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

மேலே கூறிய சவால்கள் மட்டுமின்றி தேசிய அரசியலில் பங்களிப்பு, தேசிய அரசியலில் உள்ள சவால்கள், சர்வதேச உறவு போன்றவையும் தவெக-விற்கும், விஜய்க்கும் மிகப்பெரிய அளவில் சவாலாக மாறி நிற்கும். மேலே கூறிய சவால்கள் அனைத்தையும் கடந்து வந்தால் மட்டுமே விஜய்யால் பிரதமர் வேட்பாளராக களமிறங்க முடியும்.

காங்கிரஸ் தலைமையில் கடந்த இரு தேர்தல்களை பிரதமர் வேட்பாளர் யாரென்று முறையாக அறிவிக்காமல் களமிறங்கியது அவர்களுக்கு படுதோல்வியை தேர்தல்களில் பதிலாக அளித்தது. 2029 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி பிரதமர் வேட்பாளர் இல்லாமல் களமிறங்கினால் நிச்சயம் அது பாஜக-விற்கே பலமாக மாறும். இதனால், இந்த பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரசும், ராகுல்காந்தியும் உள்ளனர்.

Source: Read Full Article