ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களின் கருத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் வல்லமை திமுகவுக்கு தான் உண்டு என திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் துறைமுகம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் நினைவுநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய சேகர்பாபு, “சட்டமன்றம் 8 மணி வரையில் நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் இல்லை. ஆனாலும் நாள் தவறாமல், நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாடியே சட்டமன்றத்திற்கு சென்று அவை முடிந்த பிறகு தான் திமுக எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வருகின்றனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் திமுக என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் மன்றத்தில் மட்டுமல்ல சட்டமன்றத்திலும் இதை திமுக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இன்று சட்டமன்றத்தில் பேச்சுத்திறமை மற்றும் வாதத்திறமையால் திமுகவினரை வெல்ல முடியுமா என்றால் நிச்சயமாக இல்லை.

தவெகவினர் எடுக்கும் ஒரே ஆயுதம் எதற்கெடுத்தாலும் ஊழல் என்பது தான். இதைத் தவிர்த்து வேறு எதையும் கையில் எடுப்பதில்லை. சொல்லும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா என கேட்டால் மூன்று ஃபைல்கள் முதலமைச்சர் விஜயின் டேபிள் மேல் இருக்கிறது என சொல்கிறார்கள். அது என்ன கம்ப சூத்திரமா என தெரியவில்லை. 30 நாட்களாகியும் அந்த ஃபைலை திறக்க முடியாமல் முதலமைச்சர் தவித்து வருகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஈட்டி முனையாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினிடம் விஜயிடம் நேரடியாகவே கேட்டார். நீங்கள் கட்டி முடித்து வைக்கும் ஃபைல்களை எப்போது அவிழ்ப்பீர்கள் என கேட்டார். நேற்று கூட சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, கடந்த ஆட்சிக் காலத்தில் பட்டாசுக்கடை வைப்பதற்கு ஊழல் செய்தார்கள். எங்களுக்கு அந்த சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சொன்னதாக கூறினார். அப்போது முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுக்கு எங்களுக்கு கூட தவெக பட்டாசு உரிமம் வழங்குவதில் பெருமளவில் ஊழல் செய்வதாக தகவல் வந்ததே என எதிர்கருத்தை வைத்தார். சட்டமன்றம் அமளியானது. உடனே சபாநாயகர் இரு தரப்பு கருத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களின் கருத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் வல்லமை திமுகவுக்கு தான் உண்டு. பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தபோது அமைச்சர் நிர்மல் குமார், ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்ற வார்த்தையை போட, தங்கம் தென்னரசு உடனே லாட்டரி மார்ட்டினின் மருமகனுக்காகவா கைவிடுகிறீர்களா என கேட்டார். இன்றைய சட்டமன்ற நிலைமை அவ்வளவு தான். எந்த முனையாக இருந்தாலும், எந்த தாக்குதலாக இருந்தாலும் மக்களுக்காக நிற்கும் இயக்கம் திமுக என்பதை நிரூபிப்போம்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article