திருச்செந்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை திமுக ஒன்றிய செயலாளர் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அதிகாரிகளை தவெக எம்.எல்.ஏ. விஜி சரவணன் கடுமையாக கடிந்துக் கொண்டார்.

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டாரத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு சீதனப் பொருட்கள் வழங்கி பேருரை ஆற்றுவார்கள் என அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோரின் பெயர்கள் அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தது. திட்டமிட்டபடி இந்த நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் உடன்குடியில் உள்ள பேரூராட்சி திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகள் கூடியிருந்தனர்.

அப்போது அமைச்சர் ஸ்ரீநாத் வராத காரணத்தினால் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டது.

திமுக ஒன்றிய செயலாளர் அடாவடி

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருச்செந்தூர் பகுதி திமுகவினர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தனர். அப்போது கர்ப்பிணிகளுக்கு திமுக ஒன்றிய செயலாளரும், நகர் மன்ற துணைத் தலைவருமான செங்குழி ரமேஷ் வளையல் அணிவித்து சீதனப் பொருட்கள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார்.

அதிகாரிகளை சாடிய தவெக எம்.எல்.ஏ

நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்த சரவணன் எதற்காக முறைப்படி அழைப்பிதழ் தயார் செய்து பெயர்களை அச்சிடுகிறீர்கள்?.. இதனை கண்டுக் கொள்ளாமல் திமுக ஒன்றிய செயலாளரை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.

நான் அடிமட்டத்திலிருந்து எம்எல்ஏவானதால் என்னை அவமதிக்கிறீர்களா?.. நீங்கள் தான் பல ஆண்டுகளாக பணியில் இருக்கிறீர்கள். என்னை அழைத்து அசிங்கப்படுத்துவது போல் உள்ளது. அரசு நிகழ்ச்சி என சொல்கிறீர்கள். இது தொடர்பாக எனக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் சொல்வதை தான் நான் செய்கிறேன். இது அரசியல் சார்ந்து எங்களிடம் நீங்கள் பிரச்சினையை உருவாக்குவது போல் உள்ளது. அதிகாரிகள் நீங்கள் இதுபோல் செய்யலாமா? என சரமாரியாக சாடினார்

ஆனால் திமுக ஒன்றிய செயலாளர் அப்படி செய்யும் போது எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை என சம்மந்தப்பட்ட பெண் அதிகாரி கூற, அவர்கள் உங்களை மிரட்டினார்களா? என சரவணன் கேட்டார். அதற்கு அந்த அதிகாரி மறுப்பு சொன்னார். தொடர்ந்து பேசிய சரவணன், நீங்கள் செய்வது தவறு. புரோட்டாகால் அடிப்படையில் என்ன இருக்கிறதோ அதனை நானே செய்ய வேண்டும். அரசு நிகழ்ச்சி பொதுமக்களை வைத்து நடத்தி இருந்தால் கூட ஒன்றும் தெரிந்திருக்காது ஆனால் கட்சி ரீதியாக மற்றொரு கட்சியை சார்ந்தவர்களை பங்கேற்க வைத்திருப்பது சரியா என கேட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Source: Read Full Article