KN Nehru DVAC Raid: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட 12 பேர் மீது, ஆயிரத்து 20 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:

திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக, கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி தில்லை நகரில் உள்ள வீடு மட்டுமின்றி, சென்னை மற்றும் கோவையில் அவருக்கும், அவரது சகோதரருக்கும் சொந்தமான மற்று ம்தொடர்புடைய 19 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சி காலத்தில் டெண்டர் வழங்குவதில் மிரட்டி பணம் வசூலித்தது மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக பல்வேறு புகார்கள் கே.என். நேரு மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கே.என். நேரு உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர்களில் சுமார் ஆயிரத்து 20 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, 12 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர்களான கே.என். ரவிச்சந்திரன் மற்றும் கே.என். மணிவண்ணன் ஆகியோரின் பெயர்களும் அடங்கும். இதுதொடர்பான புகாரின் பேரில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கிடைத்த ஆதாரங்களை கடந்த ஆண்டே தமிழ்நாடு டிஜிபிக்கு அனுப்பி இருந்தது. ஆனால், ஆளுங்கட்சியை சார்ந்தவர் என்பதால் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் இருந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டு வேண்டப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதாக கே.என். நேரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையும் மேற்கொண்டுள்ளனர்.

கோடிகளில் கைமாறிய ரொக்கம்

திமுக ஆட்சியின் போது நகராட்சி ஒப்பந்ததாரகளிடம் மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் பணம் உறவினர்கள், அதிகாரிகள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் வாயிலாக கையாளப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடிகளில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் குறித்து ரவிச்சந்திரனுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், நெல்லையில் நடைபெற்ற அப்போதைய முதலமைச்சரின் நிகழ்ச்சி தொடர்பாக அரசு அதிகாரிகளிடமிருந்து மொத்தம் 43 லட்சம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு விதங்களில் பணம் கைமாறியது தொடர்பான அமலாக்கத்துறை அளித்த கடிதங்களின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?

அவிநாசியில் தனியார் ஆலையில் சோதனை:

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் முதல்நிலை ஒப்பந்ததாரரான வேலுமணி என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர் நேருவிற்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது. மற்றொரு முன்னாள் அமைச்சரான எஸ்.பி. வேலுமணிக்கும் நெருக்கமான இந்த ஒப்பந்ததாரர் தொடர்புடைய இடங்களில் கடந்த 2024ம் ஆண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இவரிடமிருந்து திமுக ஆட்சியில் 10 சதவிகித கமிஷன் அடிப்படையில்,வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரவிச்சந்திரனிடம் வழங்க ரமேஷ் என்பவர் வேலுமணியிடம் இருந்து ரூ.19.77 கோடி பணத்தை பெற்றதாகவும் அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article