கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் மகளிர் பொறியியல் கல்லூரி விடுதியில், மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி கையில் கற்பூரம் ஏற்றி, துடைப்பத்தால் அடித்து துன்புறுத்தியதாக சக மாணவிகள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதியில் தங்கியிருந்த மாணவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் மகளிர் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி முதலாம் ஆண்டு சி.எஸ்.இ. படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி அவர் படித்து வந்துள்ளார். அதே விடுதியில் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பொறியியல் மாணவி, வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த பி.டெக் முதலாம் ஆண்டு மாணவி, சி.எஸ்.இ. முதலாம் ஆண்டு படிக்கும் மேலும் 2 மாணவிகள் மற்றும் கடலூர் பகுதியைச் சேர்ந்த பி.டெக் முதலாம் ஆண்டு மாணவி ஆகியோரும் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.

பேய் பிடித்ததாக கூறி கொடுமை

இந்த நிலையில், வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவிக்கு பேய் பிடித்திருப்பதாக அவரது சக மாணவிகள் சிலர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவருடன் விடுதியில் தங்கியிருந்த 4 சக மாணவிகள் சேர்ந்து, அந்த மாணவியை விசித்திரமான முறையில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, மாணவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி வைத்ததுடன், துடைப்பத்தால் அவரை அடித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல்

மேலும், விடுதியில் நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும், இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் சக மாணவிகள் மிரட்டியதாக கூறப்படுகிறது. சக மாணவிகளின் தொடர் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

4 மாணவிகள் மீது வழக்குப்பதிவு

மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், அவருடன் விடுதியில் தங்கியிருந்த 4 சக மாணவிகள் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியை கற்பூரம் ஏற்றி துன்புறுத்தியது, துடைப்பத்தால் அடித்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி விடுதியில் மாணவிகளுக்கு இடையே நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் புகாரின் அடிப்படையில் சம்பவத்தின் முழு பின்னணி, மாணவியை துன்புறுத்தியதற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Read Full Article