அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் 7 நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள், மத்தியஸ்தரான கத்தார் மூலம் வாஷிங்டனுக்கு தெரிவிக்கப்பட்டன. அமெரிக்கா தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், ஒரு தீர்க்கமான போருக்கு தயாராக இருப்பதாக ஈரான் தெளிவாகக் கூறியுள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி, டெஹ்ரான் இப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பதிலுக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.

ஈரானின் கோரிக்கைகள் என்ன.?

ரெசாயியின் கூற்றுப்படி, அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தப்படுதல், வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகள் விடுவிக்கப்படுதல் மற்றும் கடற்படை முற்றுகை நீக்கப்படுதல் ஆகியவை, ஈரானின் நிபந்தனைகளில் அடங்கும். இது குறித்து சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்ட ஒரு தனி பதிவில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் 7 நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் ரெசாயி குறிப்பிட்டார். டெஹ்ரானின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் எந்தவித சந்தேகங்களும் இல்லாதது என்று அவர் கூறியுள்ளார்.

அல் ஜசீராவின்படி, "இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது வாஷிங்டனின் நலனுக்கு உகந்தது. ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் எந்த பலனையும் அளிக்காது. நாங்கள் ஒரு தீர்க்கமான போருக்குத் தயாராக இருக்கிறோம்." என்று ரெசாயி கூறியுள்ளார்.

‘CODE 100‘-ஐ வெளியிட்ட ஈரான்

அறிக்கைகளின்படி, ஈரான் தனது ஐ.ஆர்.ஜி.சி, ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதப் படைகளுக்கும், மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையான ‘CODE 100‘-ஐ வெளியிட்டுள்ளது. நிலைமை மேலும் மோசமடையும் என்ற அச்சத்தில், ட்ரம்ப், கேம்ப் டேவிட்டில் தனது வார இறுதி விடுமுறையை பாதியிலேயே முடித்துக்கொண்டு இன்று இரவு வெள்ளை மாளிகைக்குத் திரும்புகிறார். நெதன்யாகுவும் தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார். கடந்த சில மணி நேரங்களில், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்கத் தூதரகங்களும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க கத்தாரும் பாகிஸ்தானும் முயற்சி

அல் ஜசீராவின்படி, கடந்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியானதைத் தொடர்ந்து, டெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க, கத்தாரும் பாகிஸ்தானும் முயற்சி செய்து வருகின்றன. ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர, பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளும் செயல்பட்டு வருகின்றன.

போர் உத்தியை மாற்றியமைத்த ஈரான்

மற்றொரு அமெரிக்கத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறை மொஹ்சென் ரெஸாயி நிராகரிக்கவில்லை. ஈரானிய ராணுவ மதிப்பீடுகளின்படி, அத்தகைய ஒரு நிகழ்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு மிக அதிகம் என்று அவர் கூறினார். இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு ஈரான் தயாராக இருப்பதாகவும், முதல் இரண்டு சுற்று சண்டைகளுக்குப் பிறகு, தனது ராணுவ உத்தியை மாற்றியமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரெசாயியின் கூற்றுப்படி, ஈரானின் தற்போதைய ராணுவத் திட்டங்கள், வளைகுடா முதல் ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் வரையிலான அமெரிக்க கடற்படைத் தளங்கள் மற்றும் வளங்களைக் குறிவைத்துள்ளன. அமெரிக்க கப்பல் அல்லது விமானம் தாங்கி கப்பலுக்கு அருகே, ஈரான் சமீபத்தில் பல முனைகள் கொண்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை சோதித்ததாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் ஈரான் தாக்கப்பட்டால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள், அமெரிக்க வணிக நலன்கள் மற்றும் உள்நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைத்து, பெரும் பதிலடித் தாக்குதலை அது எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானிய பாதுகாப்புத் தலைவர் எச்சரித்தார்.

Source: Read Full Article