இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

கிரீவ்ஸ் அவுட்:

பும்ரா, சிராஜ் இல்லாமல் களமிறங்கிய இந்திய பந்துவீச்சை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திறம்பட சமாளித்தனர். ஜான் கேம்பால் - கிரீவ்ஸ் ஆகிய இருவரும் அபாரமாக ஆடினர். சிறப்பாக ஆடி கேம்பால் அரைசதம் விளாசினார். அவர் 60 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார்.

இதையடுத்து வந்த கார்ட்டி 13 ரன்களில் அவுட்டாகினார். தொடர்ந்து கிரீவ்ஸ் பொறுப்புடன் விளையாடினார். அவர் அபாரமாக ஆடிக்கொண்டிருந்தபோது கேப்டன் ஷாய்ஹோப் 12 ரன்னில் அவுட்டானார். ஆனாலும் அபாரமாக ஆடிய கிரீவ்ஸ் 104 பந்துகளில் சதம் விளாசி அத்தினார். அவர் ஆட்டமிழந்த பிறகு வந்த ஆண்ட்ரூ அடுத்த பந்திலே அவுட்டாக 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து தடுமாற ஜாங்கோ - சேஸ் ஜோடி சேர்ந்தனர்.

ஜாங்கோ அபார அரைசதம்:

இருவரும் இணைந்து நிதானமாக ஆட மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் ரன் ரேட் ஏறத்தொடங்கியது. இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடியதால் வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. சேஸ் 24 ரன்களில் அவுட்டானாலும் அபாரமாக ஆடிய ஜாங்கோ அரைசதம் விளாசினார்.

கடைசியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது. ஜாங்கோ 43 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

296 ரன்கள் டார்கெட்:

தற்போது 296 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது. முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் இருவரும் இலக்கை நோக்கி ஆடி வருகின்றனர். இந்திய அணிக்காக குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும், நிதிஷ் ரெட்டி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்திய அணி நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒருநாள் போட்டியில் ஆடுவதாலும், 2027 உலகக்கோப்பைக்கு தயார் ஆகும் வகையிலும் இந்த தொடர் அமைந்துள்ளதால் இந்திய அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

இளம் பந்துவீச்சு படை:

நீண்ட இடைவேளைக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கியிருப்பதால் போட்டியைக் காண ரசிகர்கள் குவிந்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் சீல்ஸ், மோதி, ஃபோர்ட், அல்சாரி ஜோசப், சேஸ் ஆகியோரே பிரதான பந்துவீச்சாளர்கள் ஆவார்கள். இளம் பந்துவீச்சு படையான இவர்கள் ரோகித், சுப்மன்கில், விராட், ராகுல் ஆகிய அனுபவ பேட்டிங்கை சமாளிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: Read Full Article