மனிதர்களை வேட்டையாடிய புலி

நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான புலிகள் உள்ளது. அவ்வப்போது புலிகள் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளை அடித்து சாப்பிட்டு வந்த நிலையில், திடீரென புலியின் பார்வை மனிதர்கள் மீது திரும்பியது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி லாரஸ்டன் எஸ்டேட் 4-வது டிவிஷன் பகுதியில் வசித்து வந்த எம். பாலகிருஷ்ணன் (58) என்ற தொழிலாளியை புலி அடித்துக் கொன்றது. அடுத்தாக ஆகஸ்ட் 21 ஆம் தேதி அதே பகுதியில் வசித்து வந்த கே. ரவிகுமார் என்ற மற்றொரு தொழிலாளரை அவரது வீட்டிற்கு அருகே வெறும் 200 மீட்டர் தொலைவில் புலி தாக்கி கொன்றது. இந்த சம்பவத்தில் அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே வரவே அச்சப்பட்டனர். மனிதர்களை தாக்கி கொல்லும் ஆட்கொல்லி புலியை பிடிக்க வேண்டும் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

புலியை சுட்டுப்பிடிக்க களம் இறங்கிய வனத்துறை

அந்த வகையில் ஆட்கொல்லி புலியை உயிருடனோ அல்லது சுட்டு பிடிக்க களத்தில் இறங்கியது வனத்துறை, 100க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் காடு முழுவதும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். மலைப்பகுதியில் உள்ள புதர்களிலும் தேடும் பணியை முடக்கிவிட்டனர். மேலும் புலியை கவரும் வகையில் ஆடு, மாட்டை தூண்டிலாக பயன்படுத்தினர். அந்த வகையில் நேற்று முன் தினம் உணவை சாப்பிட வந்த ஆட்கொல்லி புலியானது சிக்கியது. இதனையடுத்து புலியை பிடிக்க எடுத்த நடவடிக்கை என்ன.? என வனத்துறை
வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓவேலி வனச்சரகத்தில் மனித-விலங்கு மோதலில் ஈடுபட்ட புலியைப் பிடிப்பதற்கான உரிய உத்தரவுகள் மற்றும் தொழில் நுட்ப வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு, 21-08-2026 அன்று புலியைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

வனத்துறையின் மாஸ்டர் பிளான்

அதன் அடிப்படையில் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், முதுமலை புலிகள் காப்பகம், மாவட்ட வன அலுவலர், உதவி வனப் பாதுகாவலர்கள், வனச்சரக அலுவலர்கள், வன கால்நடை மருத்துவர்கள். விரைவு மீட்புக் குழு கொண்ட 105 வனப் பணியாளர்கள் இப்பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் முதுமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த புலிக் கண்காணிப்பாளர்களும் (Tiger Trackers), வன கால்நடை மருத்துவர்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.சந்தேகிக்கப்படும் புலியைப் பிடிப்பதற்காக 305 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, புலியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் மூன்று வெப்ப உணரி ட்ரோன்கள் (thermal drones) இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு. சந்தேகிக்கப்படும் புலியின் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கூண்டில் சிக்கிய புலி

குறிப்பாக வனத்துறை அமைச்சர் அவர்கள் 11.09.2026 அன்று நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை சந்தித்து பாதுகாப்பாக இருக்குமாறும், புலியை விரைவில் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.இப்பணியானது முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரினக் காப்பாளர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் 28 நாட்களாக எவ்விதத் தொய்வுமின்றி மேற்கொள்ளப்பட்டு வந்தது.இந்நிலையில், புலியைப் பிடிப்பதற்காக கூடலூர் வனச்சரகப் பகுதியில், அல்லலா எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொறிக் கூண்டில் (18.09.2026) அன்று அதிகாலை சந்தேகிக்கப்படும் புலியானது சிக்கியது.

வண்டலூர் பூங்காவில் ஆட்கொல்லி புலி

புலி உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக கால்நடை மருத்துவரின் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வழிகாட்டுதல் குழுவின் ஆய்வு மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் பிடிப்பட்ட புலியானது 12 வயதுக்கு மேற்பட்டதாக இருப்பதாலும் அதன் சிங்கபற்கள் தேய்மானம் அடைந்திருப்பதாலும் உடல் நலிவுற்ற நிலையில் உள்ளதால் மேற்கொண்டு அதனை அடர்வனப்பகுதியில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை தெரியவருகிறது. அதன் அடிப்படையில் புலியானது தொடர் சிகிச்சை மற்றும் மருத்துவ மேலாண்மைக்காக சென்னை வண்டலூரில் உள்ள மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article