தமிழ்நாடு முழுவதும் ஜெம் வீரமணியின் வழக்கு மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பல சிறுமிகளை சீரழித்த பிரபல தொழிலதிபரான ஜெம் வீரமணிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜெம் வீரமணி வழக்கு:

கடந்த திமுக ஆட்சியிலே ஜெம் வீரமணி மீதான குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் சிக்கிய நிலையில், இந்த விவகாரத்தை திமுக மூடி மறைத்ததாக தவெக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் இதுதொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

கனிமொழியின் கண்டனம்:

இந்த நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஒரு வாரத்திற்கு பிறகு திமுக-வின் முக்கியமான பெண் தலைவர் கனிமொழி இன்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஜெம் வீரமணிக்கு எதிராக வெளியிட்டுள்ள கண்டனத்தில் ஜெம் வீரமணி என்ற வார்த்தையே இடம்பெறவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1990களில் இருந்தே இக்குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடுஞ்செயல்களில் அவர்களால் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.

இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

இது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதியல்ல. இனி எந்தக் குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில், பாதுகாப்பான சமூகச் சூழலை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ஜெம் வீரமணி பெயரே இல்லை:

ஜெம் வீரமணி என்ற குற்றவாளியின் பெயரையே பயன்படுத்தாமல் கொடூரமான இந்த பாலியல் குற்றச்சாட்டிற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்திருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் யாருடைய ஆட்சியில் நடந்தது? யார் குற்றவாளி ? என்ற எந்த விவரமும் இல்லாமல் பொதுவாக கண்டனம் பதிவு செய்திருப்பது குறித்து கடுமையாக கேள்விகளை கனிமொழிக்கு முன்வைத்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தற்போது வரை ஜெம் வீரமணி, சாந்தி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிரகாஷ் என்பவருக்கும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியைத் தொடர்ந்து திமுக-விற்கு தவெக அமைச்சர் நிர்மல்குமார் மட்டுமின்றி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Source: Read Full Article