நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் என்ற தாராள அவகாசம் இருக்கும் நேரத்தில், இப்போதே தேசிய அளவில் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல நேரங்களில் வெவ்வேறு தரப்பினர் மூன்றாவது அணிக்கு முயற்சித்த நிலையில், இந்த முறை அதற்காக மெனக்கிடுவது திமுக.

ராகுலை முதன்முதலாக பிரதமர் வேட்பாளர் என்றவர் மு.க.ஸ்டாலின்

அதற்கு காரணம் இருக்கிறது. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அதில் உடன்படாமல் காங்கிரஸ் கட்சியுடனே இருக்கமாக கைக்கோர்த்து நின்றது திமுக. இத்தனைக்கும் 2019 நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் உட்பட எந்த கட்சியுமே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லாத நேரத்தில், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்திதான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று முதன்முதலில் முழங்கியவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 2021 சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினார் அவர். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்டும், ஆட்சியில் பங்கு என்ற முழுக்கத்தை முன் வைத்தும் முரண்டு பிடித்தது காங்கிரஸ். அப்போதும் காங்கிரஸை கழட்டிவிட மனமில்லாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அந்த கட்சிக்கு கடந்த தேர்தலை விட மூன்று தொகுதிகள் கூடுதலாக, அதாவது 28 தொகுதிகள் ஒதுக்கியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட் கொடுத்தும் பெருந்தன்மை காட்டினார்.

திமுகவை கழட்டிவிட்ட காங்கிரஸ் – தவெகவுடன் கூட்டணி

ஆனால், தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்ததும், விஜய் தலைமையிலான தவெகவிற்கு ஆதரவு அளித்தது காங்கிரஸ். அதுவும் தவெக ஆட்சி அமைக்க முதன் முதலில் கடிதம் கொடுத்ததும் அந்த கட்சிதான். இது திமுகவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கட்டான தருணங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருந்த திமுக, காங்கிரஸ் கட்சியின் தேர்தலுக்கு பிந்தைய முடிவை எதிர்பார்க்கவில்லை. அதோடு, விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு ராகுல்காந்தியே சென்னை கிளம்பி வந்ததும் திமுகவை உஷ்ணமாக்கியது. இத்தனைக்கும் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக்கொள்ளும்படி, ஆட்சியில் இருந்தபோது பல வழிகளில் திமுகவிற்கு நெருக்கடியை கொடுத்திருந்தது பாஜக. ஆனால், அதையெல்லாம் எதிர்கொண்டு, காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்தே பயணிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்த திமுகவிற்கு, காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்து விஜயை முதல்வர் ஆக்கியதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

நட்பு – துரோகமான வரலாறு

பல ஆண்டுகளாக நட்புடன் இருந்த காங்கிரஸ் கட்சியை அந்த தருணத்தில் இருந்து துரோகியாக பார்க்கத் தொடங்கியது திமுக. தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்திருந்தாலும் வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தேசிய அளவில் மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என்று கங்கனத்தை கட்டிக்கொண்டது திமுக.

தேசிய அளவில் 3வது அணி – காங்கிரஸ்க்கு செக் வைக்கும் திமுக

அதனுடைய நீட்சியாகதான் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பிராதனமாக இடம்பெற்றிருக்கும் இண்டியா கூட்டணிக்கு மாற்றாக, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறது திமுக. இதனை சாத்தியப்படுத்த நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழியை களமிறக்கிவிட்டிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இது காங்கிரஸ் கட்சிக்கும் அந்த இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்குமே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் உத்தவ் தாக்கரேவை கனிமொழி முதன்முதலாக மும்பை சென்று சந்தித்தது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இண்டியா கூட்டணியை உடைக்கும் திமுக ?

இதனை மனதில் வைத்துதான் மதிமுக எம்.பி. துரை வைகோ, இண்டியா கூட்டணியை உடைக்க திமுக முயற்சிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். உத்தவ் தாக்கரேவை பார்த்த கையோடு டெல்லி சென்ற கனிமொழி, ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்திருக்கிறார். அதோடு, நேற்று மேற்கு வங்கம் வரை சென்று மமதா பானர்ஜியையும் சந்தித்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் அவர். அதோடு, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள காக்ரோச் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவுடனும் கனிமொழி பேசியிருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

’எதிரியை விட துரோகியை வீழ்த்துவதே முக்கியம்’

எது எப்படி இருந்தாலும், 2029 தேர்தலில் அரசியல் எதிரியான பாஜகவை வீழ்த்துவதை விட, கூடவே இருந்து குழி பறித்து சென்றுவிட்டதாக நினைக்கும் காங்கிரஸ் கட்சியை, மத்தியில் ஆட்சியில் அமரவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது திமுக. அதுதான் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு இழைத்த துரோகத்திற்கான பாடமாக இருக்கும் என்பதும் திமுகவின் கணக்கு.

Source: Read Full Article